மே தினம்! இன்னைக்கு கேடுகெட்ட கம்யூனிஸ்ட்காரன் நிலைமை இதுதான்!

சிவப்பு சட்டைக்கும் சிவப்பு கொடிக்கும் ஒரு காலத்தில் மரியாதை இருந்தது. கையில் இருக்கும் உண்டியலில் நிறையவே காசு இருந்தாலும், கைக்காசு போட்டு டீ குடிப்பார்கள். காலில் செருப்பு இல்லாமல் தெருத்தெருவாக நடப்பார்கள். கட்சியின் நிர்வாகியே போஸ்டர் ஒட்டுவார். டீயும், பீடியும் கம்யூனிஸ்ட் அடையாளமாக இருந்தது.


ஆனால், இன்று கம்யூனிஸ்ட் கட்சியும் முழுக்கமுழுக்க வலதுசாரி கட்சியாகவே லாபம் பார்க்கவும், திருட்டுத்தனம், அயோக்கியத்தனம் பண்ணும் கட்சியாக மாறிவிட்டது. தேர்தலுக்குத் தேர்தல் ஒரு கட்சிக்குப் பின்னே நாய் போல செல்வது பழக்கமாகிவிட்டது.

இந்த நிலையில் ஒரு பழைய கம்யூனிஸ்ட் எழுதிய இந்தக் கவிதை மே1க்கு மட்டுமல்ல, எல்லா நாட்களுக்கும் ஏற்றது. கவிஞர் வித்யாஷங்கர் என்ற பத்திரிகையாளர் துரை எழுதிய கவிதை இது. கம்யூனிஸ்ட் கட்சியின் பரிணாம வளர்ச்சியின் அப்பட்டமான பதிவு இது.

இன்குலாப் ஜிந்தாபாத்

கேப்பிடலிஸ்ட்,பூர்ஸ்வா

பெட்டிப் பூர்ஸ்வா

பீரோக்கிரட்,லும்பன்

இப்படி இப்படியாய்

சக மனிதர்களை வகை பிரித்தோம்.

வேலையற்ற நாட்களில்

பட்டினியோடு

டீ குடித்து சார்மினாரோடு

திருத்தல் வாதம் தவறென்று

மயிர் பிளக்கும் வாதம் செய்தோம்.

நச்சு இலக்கியம் நசிவு இலக்கியம்

கமர்சியல் முற்போக்கு பிற்போக்கு

என்று எழுத்தை வகை பிரித்தோம்

நண்பர்கள் உதவியால்

எழு ஓடு புரட்சி செய்

என்று உலகைப் புரட்டும்

நெம்புகோல் கவிதைகளை

படைத்து சிலாகித்தோம்

புரட்சி வசந்தவிடியல்

வார்த்தை வனப்பில்

சிவப்பு கனவுகளோடு

உண்டியல் குலுக்கி  

போஸ்டர் ஒட்டினோம்.

அவரவர்க்குமான வேலையில் சேர்ந்தோம்

யூனியன் நட்பில் வேண்டியர்கட்கு

வேலை வாங்கினோம்

போராடிப் பெற்ற கூடுதல் போனசை

சக தொழிலாளிக்கு

வட்டிக்கு கொடுத்து

ஈவிரக்கமற்று வசூலித்தோம்.

சொந்த ஜாதியில் திருமணமானது

மனைவி வீட்டார் வேண்டுதலென்று

கோவிலுக்குப் போனோம்

பிள்ளைகளுக்கு மொட்டை போட்டு

நேர்த்திக் கடன் செலுத்தினோம்.

கொளுந்தியாளுக்காக கமர்சியல் புத்தகம்

குழந்தைகளுக்காக ரஜினி படம்

இப்படிப் போனது

இருக்கிறவனிடம் பறிப்பதில் தப்பில்லைஎன்று

வாங்கிய லஞ்சத்தில் பொருட்களால்

வீடு நிறைத்தோம்.

மாநாடுக்கு மாநாடு  

தொழிலதிபர்கள் தரும் தாராள நன்கொடையால்

கூடிக் கலைந்தோம்

கலை இரவுக்கு சிவப்பு சட்டை அணிந்த

நடிகர்களை அழைத்து  

முற்போக்கு கலைஞனென்று

முதுகில் சுமந்தோம்.

தவறாமல் யூனியன் சந்தா கட்டி

பாதுகாப்பாய் வீடு

மகனுக்கு வெளிநாட்டில் வேலை

ஓய்வூதியத்தில்.

நாளும் ஒரு கதை கவிதை கட்டுரை

பத்திரிகையாளர் சினிமாக்காரர்கள் நட்பு பேண

விருந்தோம்பல் தினம் ஒரு கூட்டம்

முகநூல் நட்பில் வெளிநாட்டுப் பயணம்

இலக்கிய உரை

தேர்தலுக்கு தேர்தல் நிறம் மாறும்

கட்சித் தலைமையை நியாயப்படுத்தல்

வீதி எங்கும் வேலையற்றோர்

சாலை எங்கும் வாழ்க்கை போராட்ட 

புழுக்களாய் மானுடம்

கோடி கோடியாய் உயரும்

தேர்தல் செலவுகள்

இத்தனைக்கும் பிறகு

மேதின ஊர்வலத்தில்

இன்குலாப் ஜிந்தாபாத்

சொல்லிச்செல்ல

வெட்கமாயிருக்கிறது  

எனக்கு......................

உனக்கு....................?