பிணம் தின்னும் அரசியலா இது..! மனுஷ்யபுத்திரன் ஆவேசம்.

திமுக கொரோனோ முழு அடைப்புக் காலத்தில் உணவின்றிவாடும் மக்களுக்கு உதவுவதை சுகாதாரக் காரணங்களைக்காட்டி தடுக்க எடப்பாடி அரசு முயற்சிப்பது கொடூரமான பிணம் தின்னி அரசியல் என்று கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஆவேசம் அடைந்திருக்கிறார்.


பிரதமர் ஒவ்வொரு குடும்பமும் 9 குடும்பங்களுக்கு உணவளிக்க வேண்டும் என்றாரே அதன் மூலம் கொரோனோ பரவாதா? ஹெச்.ராஜா ஆர்.எஸ்.எஸ் தினமும் 5 கோடிப்பேருக்கு உணவளிப்பதாக மார் தட்டுகிறாரே அதன் மூலம் கொரோனோ பரவாதா? நடிகர் ராகவா லாரன்ஸ் தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உணவளிக்கக்கூடாது என்ற தடையை அரசு விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்தியாவில் கொரோனோ முழு அடைப்புக் காலத்தில் அரசைவிட தொண்டு நிறுவனங்களே அதிக அளவில் மக்களுக்கு உணவளித்துள்ளன என்ற இந்தியா டுடே தகவலை நண்பர் முரளீதரன் சுட்டிக்காட்டுகிறார்( பார்க்க முதல் கமெண்ட்)

இந்திய அரசு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும் சரி, சுதந்திர இந்தியாவிலும் சரி விளிம்பு நிலை மக்களின் உணவு, சுகாதாரம், கல்வி சார்ந்த தேவைகளை முழுமையாக நிறைவேற்றியதே இல்லை. கிறிஸ்துவ மிஷனரிகளும், என்.ஜி.ஓகளும் பல்வேறு சமய சமூக அரசியல் அமைப்புகளுமே அந்தத் தேவைகளை கணிசமாக பூர்த்தி செய்துவந்திருக்கின்றன.

இப்போது தமிழக அரசு அளித்துக்கொண்டிருக்கும் சிறிய நிவாரணங்கள் மொத்த பாதிக்கப்பட்டோரில் ஒரு பகுதினரியின் ஒரு பகுதி தேவையை மட்டுமே பூர்த்தி செய்து வருகின்றன என்பது எதார்த்தம். இந்த நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட இருக்கிறது. மக்கள் பட்டினியில் சாக வேண்டும் என்று நினைக்கிறீர்களா? எதிர்க்கட்சிகள் இதனால் நற்பெயர் பெற்றுவிடும் என்று பயப்படுகிறீர்களா?

திமுக புயல், வெள்ளம், வறட்சி என எல்லா பேரிடர்களிலும் மக்களோடு நின்றிருக்கிறது. திமுக தலைவர் தளபதி மொத்த இயக்கத்தையும் இதுபோன்ற துயரங்களில் நிவாரணப்பணிகளில் ஈடுபடுத்தி வந்திருக்கிறார். அதுமக்களுக்கு செய்யக்கூடிய எந்த உதவியையும் தடுக்க உங்களுக்கு உரிமையோ அதிகாரமோ கிடையாது. தடையை விலக்கிக்கொள்ளாவிட்டால் தடையை மீறி இந்த உதவிகள் வழங்கப்படும்.

நோய்ப்பரவலை ஒட்டி உதவிகள் வழங்குவதில் விதிமுறைகளை நீங்கள் வகுக்கலாம். கொடுக்காதே என்று சொல்ல நீங்கள் யார்? சென்னை வெள்ளத்தில், வர்தா- ஒக்கி- கஜா புயல்களில் மக்களை எப்படிச் சாகவிட்டீர்கள் என்று தெரியாதா? உங்கள் செயலின்மையை மறைக்க ஒவ்வொரு நாளும் ஒரு நாடகம். இந்த ஆட்சி கொரோனோவைவிட கொடுமையானதாக இருக்கிறது என்கிறார் மனுஷ்ய புத்திரன்.