நாம் திருப்தியும் மகிழ்ச்சியும் நிறைந்தவர்களாக வாழ்வது, இவ்வுலகை நாம் எவ்வாறு எடை போடுகிறோம், எத்தகைய கண்ணோட்டத்துடன் நோக்குகிறோம் என்பதைப் பொறுத்தது. எப்பொழுதும் மன நிறைவும், மகிழ்ச்சியும் இல்லாமல் தான் வாழப் போகிறோம் என்று உறுதியாக முடிவெடுத்தவர்களுக்கு எத்தகைய சூழ்நிலையும் திருப்தி அளிக்காது.
மன நிறைவையும், மகிழ்ச்சியையும் அடைவதற்கு வழி இதோ!
மகிழ்ச்சியற்ற மனம், நிறைவு அற்ற மனம், இவை இரண்டும் இருக்கும் வரை நம்மால் மனதளவிலோ அல்லது வெளி உலகத்திலோ எவ்வித வெற்றியையும் பெற முடியாது. ஏனெனில் இத்தகைய மனப்பாங்கு நம்முடைய மனதின் ஆற்றலையும், உடலின் ஆதார சக்தியையும் வீணடித்து விடுகின்றன.
மன நிறைவையும், மகிழ்ச்சியையும் எவ்வாறு அடைவது?
உன்னதமான, தெய்வீகமான செயல்களில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதினால் நாம் களைப்படைவதில்லை. மனச்சோர்வு அடைவதில்லை. மாறாக அத்தகைய சூழ்நிலையில் செயல் புரியும் பொழுது நம் மனம் புதிய சக்தியைப் பெறுகிறது. தன்னுள் புதைந்து கிடக்கும் ஆற்றலை உணர்கிறது. நம்மை பலவீனப் படுத்தும் சிந்தனைகளுக்கு இடம் தராமல் விழிப்புடன் இருக்க வேண்டும். சினம், கவலை, கட்டுக்குள் அடங்காத ஆசைகள், கிளர்ச்சி, ஏக்கம் ஆகிய அனைத்தும் நம்முள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. பலவீனப்படுத்துகின்றன. ஆகவே மனமும், உடலும் சீராக இருக்க இவை அனைத்தையும் தவிர்க்க வேண்டும். வாழ்க்கையை இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். மகிழ்ச்சியாகவும், வாழ்க்கையே முழுமையாகவும் வாழ்ந்திட எத்தகைய பண்புகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும், எவற்றிற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
அப்பொழுதுதான் மனதை எப்போதும் சமநிலையில் வைத்திருக்க இயலும். அன்றாட செயல்களை செய்யும் பொழுது மனம் உணர்ச்சிவசப்படாத நிலையில் இருக்கவேண்டும். விருப்பு வெறுப்பற்ற பாங்கில் மனம் செயல்பட வேண்டும். இதனால் எல்லா விதமான சஞ்சலங்களும், கவலைகளும், குழப்பங்களும், மன அழுத்தமும் ஓடி மறையும். அதிர்ஷ்டவசமாக ஏதேனும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி இருப்பவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். ஏனெனில் அதிர்ஷ்டம் என்பது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதாகும்.
வெற்றி என்பது அதிர்ஷ்டத்தை கைவிடாது பயன்படுத்திக் கொள்வதாகும். வாய்ப்புகள் நம்மைத் தேடி வந்து கொண்டேதான் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்ள நாம் தான் தயாராக இருப்பதில்லை. கட்டுப்பாட்டுடனும், உண்மையான அன்புடனும், முழு அர்ப்பணிப்புடன் உழைப்பதன் மூலம் ஒருவன் அடையும் இன்பத்திற்கும், மன நிறைவுக்கும் அளவே கிடையாது. மன அமைதிக்கு நம் மனம் தூய்மையாக இருக்க வேண்டும். கர்வம், பொறாமை, பொறுமையற்ற தன்மை, பயம் மற்றும் சுயநலம் ஆகியவற்றை உதறித்தள்ளுங்கள்.
அன்பு, கனிவு, பொறுமை, பணிவு மற்றும் பக்தி கலந்த மரியாதை ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். தீய பண்புகளையும், இயல்புகளையும் களைந்து எறிவோம். உயர்ந்த பண்புகளை வளர்த்துக் கொள்வோம். இதுவே மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்வதற்கு வழி.