அரியானா மாநிலத்தில் சுங்கச்சாவடி ஒன்றில் கட்டணம் செலுத்த மறுத்த ஒரு நபருக்கும் அங்கு பணிபுரியும் பெண்ணுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது.
பட்டப் பகல்! வெட்டவெளி! பணம் கேட்ட பெண் ஊழியருக்கு நடுரோட்டில் நிகழ்ந்த விபரீதம்!

அரியானா மாநிலம் குருகிராமின் கெர்கி தவ்லா என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்போது அந்த வழியே காரில் வந்த நபர் தான் ஒரு விஐபி என்றும் அதனால் சுங்கக் கட்டணம் செலுத்த முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் கேட்டை திறந்து விடுமாறும் அந்த நபர் கேட்டுள்ளார்.
ஆனால் விஐபி என்பதற்கான எந்த அடையாள அட்டையையும் காண்பிக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த சுங்கச்சாவடியில் பணியில் இருந்த பெண் ஊழியர் கட்டணம் செலுத்தி விட்டு செல்லுமாறு கட்டாயப் படுத்தினார். இதை ஏற்க மறுத்த அந்த பணக்காரர் சற்றும் எதிர்பாராத வகையில் சுங்கச்சாவடியில் பணியில் இருந்த பெண்ணை பளீரென ஒரு அறை விட்டார்.
தான் தாக்கப்படுவோம் என்பதை சற்றும் அறிந்திராத அந்த பெண் பதிலுக்கு அவரை அடித்தார். பின்னர் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அடித்துக் கொள்ள சக ஊழியர்கள் திரண்டு இருவரையும் விலக்கி வைத்தனர். அதன் பின்னர் காரில் இருந்த நபர் கோபமாக அங்கிருந்து சென்றுவிட்டார்.
பின்னர் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பெண் ஊழியர் தாக்கப்படுவதும், பிறகு காரில் வந்தவர் அடிவாங்குவதும் என அனைத்து காட்சிகளும் மூன்றாவது கண் எனப்படும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
பொதுவாகவே தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணம் கொடுப்பதை விரும்புவதில்லை. ஏற்கனவே சாலைவரி, பெட்ரோல், டீசல் வாங்கும்போது கூடுதல் வரி என அனைத்து வரியும் வசூலிக்கும்போது சாலையில் செல்லும்போதும் கட்டணம் செலுத்த வேண்டுமா என கேட்கின்றனர்.
சாமான்ய மக்கள் எங்கே சென்று கேள்வி கேட்பது என பணத்தை மனக் கசப்புடன் கொடுத்து விட்டு செல்கின்றனர். ஆனால் அரசியலை சேர்ந்தவர்கள் உள்ளூர் பிரமுகர்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் எல்லாம் சுங்கச்சாவடி ஊழியர்களை மிரட்டுவதும் அதிகம் பேசினால் சுங்கச்சாவடிகளும் அடித்து நொறுக்குவதும் போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அதுபோன்ற ஆட்களுக்கு அடிபணிந்து ஓசியிலேயே அனுப்பி வைத்து விடுகிறார்கள்.