இந்தியாவிலேயே முதல்முறை! திருநங்கைக்கு தூத்துக்குடி ரிஜிஸ்டர் ஆபிசில் கல்யாணம்!

தூத்துக்குடி: இதுவரை இல்லாத வகையில், முதல்முறையாக திருநங்கையை திருமணம் செய்த இளைஞருக்கு, பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன்படி,  இந்தியன் ரயில்வேயில் ஒப்பந்த கூலியாக பணிபுரிபவர் அருண் (22 வயது), இவர், தனியார் காலேஜில் 2ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படிக்கும் ஸ்ரீஜா என்ற திருநங்கையை திருமணம் செய்ய முடிவெடுத்தார். இதன்படி, 2018ம் ஆண்டு அக்டோபரில் இவர்கள் இருவரும் அருள்மிகு சங்கர ராமேஸ்வர கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர், ரிஜிஸ்டர் அலுவலகம் சென்று, தங்களது திருமணத்தை பதிவு செய்ய முயன்றனர். ஆனால், அதனை ரிஜிஸ்டரர் ஏற்க மறுத்துவிட்டார். இதன்பேரில், இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி, கடந்த ஏப்ரல் 22ம் தேதியன்று, ஒரு இளைஞர், திருநங்கையை திருமணம் செய்வதில் தவறில்லை என தீர்ப்பளித்தார்.

இதன்பேரில், மே 20ம் தேதியன்று, குறிப்பிட்ட தம்பதியினரை வரவழைத்த, ரிஜிஸ்டரர், அவர்களுக்கு திருமணப் பதிவுச் சான்றிதழ் அளித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே திருநங்கை ஒருவரின் திருமணத்தை மாநில அரசு ஒன்று அங்கீகரித்திருப்பது தூத்துக்குடியில் தான் நிகழ்ந்துள்ளது.