மகாராஷ்டிர மாநிலம் பல்கர் நகரில் கழிவுநீர் வடிகால் அமைப்பில் நூற்றுக்கணக்கான துகள்களாக மனிதத் தசைகள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.60 ஆயிரம் கடனுக்கு நண்பனை 600 துண்டுகளாக வெட்டி கொலை செய்த கொடூரன்

குடியிருப்பு ஒன்றின் கழிவு நீர் வடிகால் அமைப்பில் அடைப்பு ஏற்பட்டதால் அதனை நீக்க குடியிருப்புவாசிகள் தொழிலாளரை அழைத்தனர். கழிவுநீர் வடிகால் அமைப்பை திறந்த போது அதில் சில விரல்கள் மிதந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் கழிவு நீர் அமைப்பை ஆய்வு செய்த போது அதில் ஆயிரக் கணக்கான துகள்களாக மனிதத் தசைகள் கிடந்தன. மேலும் கழிவு நீர் வழியாக சாலையிலும் உடல் துகள்கள் வெளிவர ஆரம்பித்தன.
இதனை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். எனினும் தலையோ எலும்புகளோ அங்கு இல்லை. இறந்தது ஆணா, பெண்ணா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அந்தத் தசைகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் டாக்டிலாக்ராஃபி (dactylography) எனப்படும் அறிவியல் ரீதியான அடையாளம் காணும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
40 கிலோ எடையிலான தசைகள் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பல குடியிருப்பு வாசிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த சில நாட்களாக உடல் அழுகிய வாசனை வந்ததாகவும், ஆனால் விலங்குகள் ஏதும் இறந்திருக்கக் கூடும் என்று எண்ணியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கொலையாளி தசைகளை துகள்களாக நறுக்கி கழிவறைக் குழாயில் போட்டு தண்ணீரை ஊற்றி விட்டிருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ள போலீசார், விசாரணை அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது
விசாரணையில் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் பின்டு சர்மா என்பது தெரியவந்தது. அவர் தனது நண்பர் கணேசை கொலை செய்து உடலை 600 துண்டுகளாக்கி தனது வீட்டின் கழிவறை கோப்பைக்குள் போட்டு தண்ணீரை ஊற்றியுள்ளதையும் ஒப்புக் கொண்டுள்ளான்.
60 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி தராமல் அழைக்கழித்த காரணத்தினால் கணேசை பின்டு கொலை செய்து உடலை 600 துண்டுகளாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. கணேஷ் உடலை பிண்டு எப்படி 600 துண்டுகளாக்கினான் என விசாரணை நடைபெற்று வருகிறது.