ஒரு மிகப்பெரிய மாற்று சக்தியாக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன் கட்சிக்கு மக்கள் அப்படியொன்றும் வாக்குகளை அள்ளிக் கொடுத்துவிடவில்லை. அதனால் அப்செட் ஆன கமல்ஹாசன் பிக்பாஸ், சினிமா என்று வழக்கமான தன்னுடைய வேலையில் இறங்கிவிட்டார்.
கட்சியும் மாறலை, கமல்ஹாசனும் மாறலை! 2021ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் ஆட்சி தானாம்! அதிர்ச்சி அழைப்பு!

ஆனால், கட்சியை நடத்திக்கொண்டிருக்கும் நிர்வாகிகளுக்கு ஏதாவது வேலை கொடுத்தே ஆகவேண்டுமே! அதனால் கட்சியை வலுப்படுத்தும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கத் தயாராகிறதாம் மக்கள் நீதி மய்யம்.
அதுகுறித்து இன்று மக்கள் நீதி மய்யம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு இது. கட்சி கடந்த ஒராண்டிற்கும் மேலாக மாற்றத்தினை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரும் நம்பிக்கையுடன் நமது கட்சிக்கு மக்கள் வாக்குகளை அளித்தனர்.
அதற்கு ஏற்ற வகையில் மிகவும் பொறுப்பாகவும், அதே சமயத்தில் ஒரு வலுவான அரசியல் இயக்கமாகவும் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய எழுச்சியோடு, தமிழக மக்களின் உண்மையான ஆதரவுடன் நமது கட்சி செயலாற்றி வருகின்றது.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் நமது ஒற்றைக் கொள்கையான மக்கள் நலனை நடைமுறைக்கு கொண்டு வந்து ஆட்சி அமைக்கின்ற வாய்ப்பினை பெருக்குவதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொண்டு வருகிறோம். அதன் முதல் கட்டமாக கட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் கட்சி கட்டமைப்பினை விரிவாக்கம் செய்திட நாம் முடிவெடுத்துள்ளோம்.
கட்சியின் புதிய ‘கட்டமைப்பு விளக்கக் கூட்டம்’ வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகளில் மதுரை மண்டலத்திற்குபட்ட மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், திருநெல்வேலி மண்டலத்திற்குட்பட்ட விருதுநகர் மாவட்டத்திலும் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச்செயலாளர் அருணாசலம், பொருளாளர் சந்திர சேகர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அந்த கூட்டம் ‘2021 நமக்கான ஆட்சி’ என்கின்ற நமது உயரிய நோக்கத்தினை நோக்கிய முக்கிய நகர்வாகும் என்று கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆக, 2021க்கு அன்புமணியுடன் போராட ஒரு முதல்வர் வேட்பாளர் ரெடி.