கொத்து பரோட்டா ஓகே! மதுரை பன் பரோட்டா டேஸ்ட் பண்ணியிருக்கீங்களா?

மதுரை: மதுரையில் பன் பரோட்ட விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.


இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் அதுவும் குறிப்பாக மதுரை பக்கம் சென்றால் வித விதமான பரோட்டாவை நீங்கள் ஓட்டல்களில் சாப்பிட முடியும். அதில், கொத்து பரோட்டா, கறி பரோட்டா, சில்லி பரோட்டா இப்படி பல வகைகள் உள்ளன. ஆனால், நீங்கள் என்றேனும் பன் பரோட்டா சாப்பிட்டிருக்கீங்களா? என்ன முழிக்கறீங்க?

மதுரை பக்கம் சென்றால் பன் பரோட்டா சாப்பிட்டு பாருங்கள். பன்னும், பரோட்டாவும் சேர்த்து, மட்டன் சுக்கா அல்லது காடை கிரேவியுடன் பரிமாறப்படும் இந்த பன் பரோட்டா புசுபுசுவென இருக்கும். சாப்பிட்டால், சும்மா அப்படி இருக்கும். அதன் சுவையை வெறும் வார்த்தையில் விளக்கிட முடியாது.

ஒருமுறை சாப்பிட்டால்தான் உங்களுக்கு புரியும். சாப்பிடும்போதே, எத்தனை இன்பங்கள் வாழ்வில் வைத்தாய் இறைவா, என நாவூற, மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த மதுரை ஸ்பெஷல் பன் பரோட்டா கடந்த 1990களில் இருந்து, மதுரை தெருக்களில் செமயாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இதன் அருமை பலருக்கு தெரிவதில்லை.

மதுரை கேகேநகர் பக்கம் சென்றால் பன் பரோட்ட விற்கும் கடை எதுவென்று விசாரியுங்கள். அங்கே உள்ள  பன் பரோட்டா விற்பனை கடைக்கு வழி காட்டுவார்கள். பிற்பகல் 2 மணி தொடங்கி, நள்ளிரவு வரை இங்கு பன் பரோட்டா ஸ்பெஷலாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடையின் பெயர் என்னவென்று கேட்கறீர்களா, கடையின் பெயரே, மதுரை பன் பரோட்டா கடைதான்!