மதுரை: திமுக சார்பாக, மானாமதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர், செல்ஃபோன் கூட இல்லாத அளவுக்கு எளிமையானவராக உள்ளார்.
இனிமேதான் செல்ஃபோனே வாங்கப் போறேன்: எளிமையால் வியப்பூட்டும் திமுக வேட்பாளர்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தமிழகத்தில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்து, தொகுதி பங்கீட்டிலும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. திமுக கூட்டணி சார்பாகவும், அஇஅதிமுக கூட்டணி சார்பாகவும் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதில், திமுக கூட்டணி சார்பாக, மானாமதுரை நாடாளுமன்ற தொகுதியில் இலக்கியதாசன் என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். எளிமையான தோற்றம், இயல்பான பேச்சு, பழக்கவழக்கங்கள் என பலரையும் ஆச்சரியப்படுத்தும் நபராக இலக்கியதாசன் உள்ளார். இந்த விஞ்ஞான தொழில்நுட்பம் வளர்ந்த காலத்திலும், தன்னிடம் செல்ஃபோன் கூட இல்லை என்று, இலக்கியதாசன் வெள்ளந்தியாகக் கூறுகிறார்.
இதுபற்றி வேட்பாளர் இலக்கியதாசனிடம் பேசியபோது, '' 1969ம் ஆண்டு முதல் நான் அரசியலில் உள்ளேன். என் குருநாதர் தா. கிருஷ்ணன். அண்ணா காலத்தில் இருந்தே அரசியல் ஆர்வம் கொண்டவன் என்பதால், நான் எளிமையான வாழ்க்கை வாழ்ந்துவருகிறேன். இதுவரையிலும் எனக்கு செல்ஃபோன் தேவைப்பட்டதில்லை.
என் வீட்டில் அல்லது வெளியில் இருப்பவர்கள் யாரேனும் என்னை தொடர்புகொள்ள விரும்பினால், என் அருகில் இருக்கும் நபரின் செல்ஃபோனுக்கு அழைப்பார்கள். நான் வாங்கிப் பேசுவேன். இப்படித்தான் நாட்கள் கடத்தி வந்தேன். இந்நிலையில், கட்சித் தொண்டர்களுக்காகவும், தொகுதி மக்களுக்காகவும், வேறு வழியின்றி, முதல்முறையாக, தற்போது செல்ஃபோன் வாங்க முடிவு செய்துள்ளேன்,'' என்று குறிப்பிட்டார்.
விளம்பர பகட்டான அரசியல் உலகில், இப்படியும் ஒரு எளிய மனிதரா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை...