கணவனையும், மகளையும் காட்டினால் தான் சிகிச்சை பெறுவேன்! குடும்பத்தையே இழந்த பெண் கதறல்! உருக வைக்கும் சம்பவம்!

லக்னோ: சாலை விபத்தில் கணவர், மகள் இறந்ததுகூட தெரியாமல் டாக்டர்களிடம் கேள்வி கேட்டு பெண் ஒருவர் கதறியழுத சம்பவம் உருக்கமாக உள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற பேருந்து, யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் 29 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர். இதில், சுனிதா என்ற பெண் மட்டும் உயிர்பிழைத்த நிலையில், அவரது கணவர், மகள் விபத்தில் உயிரிழந்தனர்.

அதேசமயம் அவரது மகனும் விபத்தில் உயிர் பிழைத்துவிட்டார்.  இந்நிலையில், விபத்து காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சுனிதா, தனது கணவர் மற்றும் மகள் எங்கே எனக் கேட்டு கதறியழுதார். கணவரையும், மகளையும் காட்டினால் மட்டுமே சிகிச்சை பெறுவேன் என்றும் சுனிதா அடம்பிடிக்க, அவரது மகனை மட்டும் கண்ணில் காட்டி, அவரை டாக்டர்கள் சமாதானம் செய்துள்ளனர்.

எனினும், சுனிதா தொடர்ந்து வேதனையுடன் புலம்பி வருகிறாராம். கணவருக்கு புதிய வேலை கிடைத்த நிலையில், குடும்பத்துடன் டெல்லிக்குச் செல்லும்போதுதான் இந்த விபத்து நிகழ்ந்ததாக, அடிக்கடி சுய நினைவு திரும்பும் சுனிதா சொல்லி சொல்லி மாய்ந்து போகிறாராம்.

இது டாக்டர்களை கடும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. விபத்து காரணமாக, சுனிதா சற்று மனநிலை பாதிப்படைந்துள்ளதால், அவரது கணவர், மகள் உயிரிழந்த செய்தியை, அவரிடம் டாக்டர்கள் தெரிவிக்கவில்லை. அவர் மனநிலை தேறியபின் இந்த தகவலை தெரிவிக்கலாம் எனவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.