லவ்வுக்கு எதிர்ப்பு! காதலனை வைத்து பெற்ற தாயை போட்டுத் தள்ளிய மகள் கைது!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை தனது காதலன் மூலமாகவே கத்தியால் குத்தி கொலை செய்ய செய்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.


   திருவள்ளூர் அருகே உள்ள காக்களூரை சேர்ந்தவர் பானுமதி. இவருக்கு இரண்டு மகள்கள். மூத்தவர் பெயர் சாமுண்டீஸ்வரி, இளையவர் பெயர் தேவி பிரியா. இன்று பிற்பகலில் பானுமதி தனது வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து இருந்தார். பானுமதி டிவி பார்த்துக் கொண்டிருந்த நிலையில் மூத்த மகள் சாமுண்டீஸ்வரி உள்ளே உள்ள அறையில் அமர்ந்து செல்போனை நோண்டிக் கொண்டிருந்துள்ளார்.

   இளைய மகள் தேவிப்பிரியா ஹாலில் அவரது அம்மாவுடன் அமர்ந்திருந்தார்.  அப்போது திடீரென இரண்டு இளைஞர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் யார்? எதற்கு வீட்டிற்குள் வந்தீர்கள் என பானுமதி விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது கண் இமைக்கும் நேரத்திற்குள் இளைஞர்கள் இருவரும் தங்கள் கையோடு கொண்டு வந்திருந்த கத்தியை கொண்டு பானுமதியை குத்தியுள்ளனர்.

   தடுக்க வந்த தேவிப் பிரியாவையும் அந்த இருவரும் தள்ளிவிட்டு சரமாரியாககுத்தியுள்ளனர். தாயின் அலறல் சப்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த மூத்த மகள் சாமுண்டீஸ்வரி விரைந்து வந்துள்ளார். மேலும் அவர் கையில் கிடைத்ததை எடுத்து இளைஞர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் பயந்து போன இளைஞர்கள் இருவரும் தப்பி ஓடியுள்ளனர்.

   உடனடியாக மகள்கள் தேவிப் பிரியா மற்றும் சாமுண்டீஸ்வரி ஆகியோர் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் சாமுண்டீஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. அப்போது அங்கு வந்த போலீசார் காக்களூரில் வீட்டில் நடந்தது குறித்து மகள்கள் இருவரிடமும் விசாரித்துள்ளனர். சாமுண்டீஸ்வரி நடந்ததை நடந்தது போல் அப்படியே கூறியுள்ளார்.

   சாமுண்டீஸ்வரி மிகவும் பதற்றத்துடன் போலீசாரிடம் பேசியுள்ளார். ஆனால் இளைய மகள் தேவிப் பிரியாவோ சிறிதும் பதற்றம் இன்றி போலீசார் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதே சமயம் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாகவும் பதில் அளித்துள்ளார். சம்பவம் நடந்த போது தான் அறையில் இருந்ததாக தேவிப் பிரியா கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சகோதரி சாமுண்டீஸ்வரி, இல்லை அவள் அம்மாவுடன் தான் இருந்தாள் என்று போலீசிடம் கூறியுள்ளார்.

   இதனால் தேவிப் பிரியா மீது போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இந்த நிலையில் பானுமதியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய இளைஞர்கள் இருவரும் ரத்தக்கறையுடன் ஓடுவதை பார்த்து ஊர் மக்கள் பிடித்து கட்டிப் போட்டுள்ளனர். மேலும் இருவருக்கும் சரமாரி அடி உதை விழுந்துள்ளது. இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்த போது ஒருவன் பெயர் விவேக் என்பது தெரியவந்தது. மேலும் அவன் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்.

   அந்த செல்போனில் அவன் அடிக்கடி கத்தியால் குத்தப்பட்ட பானுமதியின் மகள் தேவிப் பிரியாவுடன் அடிக்கடி பேசியிருந்தது தெரியவந்துள்ளது. அவனிடம் போலீசார் எவ்வளவோ கேட்டும் வாய் திறக்கவில்லை. இதனால் தேவிப் பிரியாவை அழைத்து வந்து போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது தான் கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது. 

   தேவிப் பிரியாவும் – விவேக்கும் காதலர்கள் என்பதை போலீசார் கண்டறிந்தனர். மேலும் தேவிப் பிரியா காதலுக்கு தாய் பானுமதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் விவேக்குடனான பழக்கத்தை முறித்துக் கொள்ள பானுமதி தனது மகளை வலியுறுத்தியுள்ளார். அத்துடன் விவேக்குடன் பழகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேவிப்பிரியாவுக்கு அடியும் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை தேவிப் பிரியா தனது காதலன் விவேக்கிடம் கூறியுள்ளார்.

   மேலும் தனது தாயை தீர்த்துக் கட்டினால் தான் நாம் இருவரும் ஒன்றாக சேர முடியும் என்றும் தேவிப் பிரியா விவேக்கிடம் கூறியுள்ளாள். இதனை தொடர்ந்து விவேக் தனது நண்பன் ஒருவரை அழைத்துக் கொண்டு தேவிப் பிரியா வீட்டிற்கு வந்து அவரது தாய் பானுமதியை கத்தியால் குத்தியுள்ளான். தாய் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார், எப்போது வர வேண்டும் என்கிற தகவலை எல்லாம் தேவிப் பிரியா செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

   இதன் பிறகே விவேக் தன் நண்பனுடன் வீடு புகுந்து பானுமதியை கத்தியால் குத்தி சிக்கியுள்ளான். போலீசார் விசாரணையில் தாய் காதலை எதிர்த்ததாகவும், இதனால் காதலனிடம் கூறி தான் தான் கொலை செய்ய சொன்னதாகவும் தேவிப் பிரியா ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் நடந்த சம்பவத்திற்கு சிறிதும் வருத்தம் கூட படாமல் போலீசார் விசாரணைக்கு தேவிப் பிரியா சென்றார். ஆனால் அவரது தாய் மருத்துவமனையில் உயிருக்கு போராடினார். ஒரு கட்டத்தில் சிகிச்சை பலனின்றி பானுமதி உயிரிழந்தார்.

   இதனை அடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் தேவி பிரியாவை கைது செய்தனர். மேலும் அவளது காதலன் விவேக் மற்றும் அவன் நண்பனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதாக என்று விசாரணை நடைபெற்று வருகிறது. பெற்ற மகளே காதலனை வைத்து தாயை கொலை செய்த விவகாரம் திருவள்ளூர் மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.