அதிவேகத்தில் லாரியை முந்த முயன்ற பாக்யலட்சுமி டிராவல்ஸ் ஆம்னி பஸ்! எதிரே வந்த மற்றொரு லாரி! நொடியில் நேர்ந்த கோர விபத்து!

விழுப்புரம் மாவட்டத்தில் சணல் நார் லாரி மீது ஆம்னிப் பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிந்தார்.


கொல்கத்தாவில் இருந்து கேரளாவுக்கு சணல் நாரை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அதே சமயம் கோவையில் இருந்து சென்னை நோக்கி ஒரு தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டு இருந்தது. இந்த இரு வாகனங்களும் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த தியாகதுர்கம் என்ற இடத்தில் அதிகாலை வந்து கொண்டிருந்தது.

தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரியை ஆம்னிப் பேருந்து முந்த முயன்றபோது எதிரே வந்த சணல் லாரி மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் லாரியில் தூங்கிக் கொண்டிருந்த மற்றொரு ஓட்டுர் தருமலிங்கம் என்பவர் தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த ஓட்டுநர் தருமலிங்கம் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நாகநல்லூரைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

விபத்தில் சிக்கிய மற்றொரு லாரி ஓட்டுநர் ராஜூ பலத்த காயமுற்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஆம்னிப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. பயணிகள் 20 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த தியாகதுருகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காயம் அடைந்த பயணிகளுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. லாரியை முந்த முயன்றபோதுதான் விபத்து ஏற்பட்டதாக அல்லது ஆம்னிப் பேருந்து தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் விபத்து நிகழ்ந்ததா அல்லது ஓட்டுநர்கள் யாராவது குடிபோதையில் இருந்ததால் விபத்து நிகழ்ந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.