முகேஷ் அம்பானியின் ஜியோவில் மட்டும் கொரோனா காலத்திலும் கொட்டுது பண மழை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகில் உள்ள பல நாடுகள் மிகக் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை கண்டு போராடுகின்றன. இந்த வேளையில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள முகேஷ் அம்பானி கடந்த ஒரு மாதத்தில் தனது ஜியோ டிஜிட்டல் வணிகம் மூலமாக 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீட்டை ஈர்த்துள்ள விவகாரம் அந்நிய நேரடி முதலீடுகள் மற்றும் இணைய வர்த்தக துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவில் சில்லறை வணிகம், ஆன்லைன் வியாபாரம், இண்டர்நெட், தொலைத்தொடர்பு என இந்தியா முழுக்க வியாபித்து இருக்கிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும நிறுவனங்கள்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவிகித பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய நிலையில். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் விஸ்டா ஈக்விட்டி நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் 2.32 சதவிகித பங்கை வாங்கியுள்ளது. மேலும் சில்வர் லேக் எனும் நிறுவனம் ஜியோவின் 1.15 % பங்குகளை வாங்கிய நிலையில்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோவில் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அந்நிய நேரடி முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதால் இந்திய பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை கடுமையாக உயர்ந்தன.

கடந்த மார்ச் 23 அன்று 885 ரூபாய் வரை சரிந்த இந்த நிறுவனத்தின் பங்குகள் விலை, தற்போதைய வெளிநாட்டு முதலீடுகள் காரணமாக 1600 ரூபாய் வரை உயர்ந்து கடந்த மே‌ 22ம் தேதி இறுதி வர்த்தகத்தில் படி 1433 ரூபாயில் முடிவடைந்தது.

இதனால் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 1 லட்சத்து 57 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. ஃபேஸ்புக் மற்றும் அமேரிக்க நிறுவனங்களின் முதலீடுகள் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 36.8 பில்லியன் டாலரில் இருந்து 57.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பின் படி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 4 லட்சத்து 39 ஆயிரம் கோடியாககும். கடந்த மாதம் உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் சுமார் 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி வீழ்ச்சியை சந்தித்த நிலையில். தற்போது இந்த நிறுவனத்தில் அந்நிய முதலீடுகள் அதிகரித்ததன் காரணமாக ஒரு மாதத்தில் வீழ்ச்சியை சந்தித்த தனது சொத்து மதிப்பை சமன்செய்துள்ளார்.

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோவில் ஃபேஸ்புக் போன்ற முண்ணனி நிறுவனங்களின் முதலீடுகள் காரணமாக இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் இந்த நிறுவனத்திற்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

ஜியோ வணிக ஒப்பந்தங்கள் முடிவடைந்த இந்த வேளையில் ரிலையன்ஸ் நிறுவனம் அடுத்ததாக இணையதள வர்த்தகத்தில் களமிறங்கியுள்ளது. ஜியோமார்ட் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய நிறுவனம் இணைய வணிகத்தில் களமிறங்கியுள்ள நிலையில், இந்தியாவில் ஏற்கனவே பிரபலமாக உள்ள அமேசான் பிளிப்கார்ட் போன்ற சில்லறை வணிக நிறுவனத்துக்கு ஜியோமார்ட் கடும் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அதன்படி ஜியோமார்ட் இணையம் மூலமாக கிட்டத்தட்ட 50 ஆயிரம் விதமான மளிகை சாமான்கள் கிடைக்கும் எனவும் ஜியோமார்ட் இணையத்தில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

கடந்த 2016ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ தொடங்கப்பட்டபோது ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டதால் இந்திய தொலைத்தொடர்பு துறையே ஆட்டம் கண்டது. இந்த நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க முடியாமல் ஏர்செல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ற நிறுவனங்கள் திவாலாகிப் போயின.

வோடபோன் ஐடியா ஏர்டெல் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணத்தை குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டதுடன் இன்று ரிலையன்ஸ் ஜியோவைத் தவிர மற்ற அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கடும் நஷ்டத்தில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தொடங்கப்பட்ட நான்கு ஆண்டுகளில் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ள ஜியோவில் சுமார் 322 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்த வாடிக்கையாளர்கள் அடிப்படையில் ஜியோமார்ட் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதாக பரவலான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் 100 கோடிக்கும் மேற்பட்டோர் செல்போன் பயன்படுத்தும் இந்த நிலையில், ஆண்டுக்கு 870 மில்லியன் டாலர்கள் வர்த்தக கொண்ட இந்திய தொலைத்தொடர்பு துறை வருங்காலத்தில் வளரும் பட்சத்தில் அமேசான் பிளிப்கார்ட் ஜியோமார்ட் போன்ற நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டியை உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மணியன் கலியமூர்த்தி