லல்லு பிரசாத்துக்கு இத்தனை அறிவா! வாய் பிளக்கும் எதிர்க் கட்சிகள்!

பொத்தாம் பொதுவாக அரசியலை பேசுவதுதான் லாலுவின் ஸ்டைல். அவரது பேச்சு எப்போதும் ஆய்வு மாதிரி நீளமாகவும், விரிவாகவும் இருக்காது. ஆனால், முதன்முறையாக ராகுல் காந்தி ராஜினாமா விவகாரத்திற்காக கொந்தளித்திருக்கிறார்.


இப்படிப்பட்ட விஷய ஞானம் உள்ளவரா லல்லு பிரசாத் என்று எதிர்க் கட்சிகளே வாய் பிளந்திருக்கிறார்கள். அப்படி என்ன சொன்னார் தெரியுமா? நீங்களே படியுங்கள். 
"காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி பதவி விலகுவதாக முடிவு எடுத்திருப்பது, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி, சங் பரிவாரங்களை எதிர்த்து போராடும் சமூக, அரசியல் இயக்கங்களுக்கும் தற்கொலை முடிவாகிவிடும்.

அவ்வாறு செய்வது பாஜகவின் வலையில் விழுவது போன்றதாகும். காந்தி - நேரு குடும்பத்தைக் கடந்து ராகுல் வகிக்கும் பொறுப்புக்கு வேறொருவர் வரும் அந்த நொடியே, மோடி - அமித்ஷா படை அவரை ராகுல் மற்றும் சோனியாவால் கட்டுப்படுத்தப்படும் 'பொம்மைத் தலைவர்' என வண்ணம் பூசிவிடுவார்கள். இது அடுத்த பொதுத்தேர்தல் வரை நீடிக்கும். ராகுல் தன்னுடைய அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு ஏன் அத்தகைய வாய்ப்பை அளிக்க வேண்டும்?

மோடி தலைமையிலான பாஜகவிடம் எதிர்க்கட்சிகள் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டது என்பது உண்மை. வகுப்புவாத, பாசிச சக்திகளை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என பணியாற்றிய அனைத்து எதிர்க்கட்சிகளும் இதனைக் கூட்டுத் தோல்வி என ஒப்புக்கொள்ள வேண்டும். என்ன தவறு நடந்தது என்பதை ஆராய வேண்டும். தோல்விக்கான காரணம் கண்டறிய முடியாத தொலைவில் இல்லை.


பாஜகவை அகற்றுவதையே எதிர்க்கட்சிகள் பொது இலக்காக கொண்டிருந்தன. ஆனால், அதற்கான தேசிய கூற்றை கட்டமைப்பதில் தோல்வியடைந்து விட்டனர். வடக்கு, கிழக்கு, மேற்கு இந்தியா, இதனை ஒரு மாநில தேர்தலாக கருதி போட்டியிட்டது. தங்களின் வியூகம் மற்றும் செயல்களை ஒருங்கிணைப்பதில் தோல்வியடைந்து விட்டன. மக்கள் தேசியளவில் மாற்றத்தை எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்க்கட்சிகள் நிலைதவறி, தங்கள் மாநிலங்களில் போட்டியிட்டு, அங்கும் வெற்றியை ஈட்டவில்லை.

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கதை உண்டு. இந்த தேர்தலில் பாஜகவிடம் மறுக்க முடியாத தலைவராக மோடி இருந்தார். ஆனால், எதிர்க்கட்சிகளிடம் ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பதில் ஒருமித்த கருத்து இல்லை.

2015 இல் நிதிஷ்குமார் பீகாரின் முதல்வராக வேண்டும் என நான் விரும்பவில்லை என்பதை மக்கள் நினைவில்கொள்ள வேண்டும். ஆனால், பழைய ஜனதா பரிவாரின் மிக மூத்த தலைவரான முலாயம்சிங் யாதவ், கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமாரை அறிவித்தபோது, நான் சாலைகளில் இறங்கி, "இதோ எங்களின் மணமகன்" எனக்கூறி, பாஜகவிடம் “உங்கள் மணமகன் எங்கே?” என பிரச்சாரம் மேற்கொண்டேன். 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக பீகாரில் வெற்றி பெற்றபோதும், அடுத்த ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்றோம்.

தேசம் முழுதும் விரவியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலை வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்திருக்க வேண்டும். அதிக தொகுதிகளை பிராந்திய கட்சிகள் கேட்பதில் பேரம் பேசினால் தவறில்லை. ஆனால், தேசிய பார்வை கொண்ட ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்மொழியாமல் தேர்தல் வியூகத்தில் தவறிழைத்திருக்கக் கூடாது.

தேசத்தை பீடித்திருக்கின்ற பிரச்சினைகளின் அடிப்படையில் பார்க்கும்போது, காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பாஜகவை விட மிகச்சிறந்தது. பணமதிப்பு நீக்கம், வேலைவாய்ப்பின்மை, விவசாய நெருக்கடி, பொருளாதார வீழ்ச்சி இவற்றால் ஏற்பட்ட அழிவுகள் குறித்து காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பேசுகிறது. மேலும், தேசிய அளவில் ஏழைகளின் நிலைமையை சீர்படுத்தவும் பல முயற்சிகளை பேசுகிறது.

ஆனால், தரத்தை பொறுத்தமட்டில் அந்த தேர்தல் அறிக்கை மிகச்சிறந்ததாக இருந்தபோதிலும், நிலைதவறிய எதிர்க்கட்சிகளிடமிருந்து தேவையான ஆதரவை பெறவில்லை. அவர்கள் பாஜகவை வீழ்த்துவதை விட தங்களை காப்பாற்றிக்கொள்ளவே பார்த்தார்கள்.

இது மோடிக்கும் மமதாவுக்கும் அல்லது மோடிக்கும் மாயாவதிக்கும் அல்லது அகிலேஷ் யாதவ் அல்லது மோடிக்கும் தேஜஸ்வி யாதவுக்கும் நடந்த போர் அல்ல. இது, பாசிச சக்திக்கும் இந்தியா முழுவதும் உள்ள விளிம்புநிலை மக்கள், வேலையில்லாத இளைஞர்கள், நெருக்கடியில் உள்ள விவசாயிகள், துன்பப்படும் சிறுபான்மையினருக்கும் இடையே நடக்கும் போர். மக்கள் தங்களின் எண்ணத்தை ஒருங்கிணைந்து வெளிப்படுத்துவதற்கான தளத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குவதில் தோல்வியடைந்து விட்டன.

சில ஆய்வாளர்கள் இந்தியா மாறிவிட்டதாகவும் கோட்சேவின் தத்துவம் மகாத்மா காந்தியின் இடத்தை பிடித்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். இந்து மனம் "கடுமையானது" என அசாவுதீன் ஓவைசி கூறியுள்ளார். இன்னும் சிலர், மோடியை ஆதரிப்பவர்கள் சாதி மற்றும் சமயம் மீதான கட்டுக்கதைகளை உடைத்துவிட்டதாக கூறுகின்றனர். தீவிரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரக்யா தாக்கூர், போபாலில் திக்விஜய் சிங்கை தோற்கடித்ததை அவர்கள் உதாரணம் காட்டுகின்றனர். இன்னும் சிலர், வங்கத்தின் அடையாளமாக, குருதேவ் ரவீந்திரநாத்ப் தாகூர் மற்றும் ஐஷ்வர் சந்திர வித்யாசாகரின் இடத்தை ஹெட்கேவர் மற்றும் கோல்வால்கர் பிடித்துவிட்டதாக கூறுகின்றனர். இவை முட்டாள்தனம் நிறைந்த பேச்சுகள்.

இந்தியா போன்ற பன்முகத்தன்மை வாய்ந்த நாட்டில், ஒரு குறிப்பிட்ட தேர்தலின் முடிவு, உண்மையை ஒருபோதும் மாற்றிவிடாது. இது, காந்தி, ஜெயபிரகாஷ் நாராயணன், தாகூர், பெரியார், ஜோதிராவ் பூலே, அம்பேத்கரின் மண், இனியும் அந்த மண்ணாகவே நீடிக்கும். நம் நிலம், பலவகைப்பட்ட கலாச்சாரங்கள் கலந்த தொட்டில், அப்படியே இனியும் நீடிக்கும்.

பிரதமர்களும், முதல்வர்களும் வருவார்கள், போவார்கள். ஆனால், பலவகைப்பட்ட கலாச்சார கூறுகளுடன் இந்த தேசம் வாழும். கல்வி, வேலைவாய்ப்பின்மை, வறுமை என எல்லாவற்றிலும் தோல்வி கண்ட ஒரு கட்சியின் வெற்றியைக் கொண்டாடுவது மடத்தனமானது. ஆம், இது பாஜகவின், பிரதமர் நரேந்திரமோடியின் வெற்றி. எதிர்க்கட்சிகளின் வியூக தோல்வி, அதனைக் கடந்து இது ஒன்றும் அல்ல.

இந்தியா பெரிய, பன்முகத்தன்மை வாய்ந்த நாடு. தேர்தல்கள் தொடர்ந்து நடக்கும். எதிர்க்கட்சிகள் தங்களது மாநிலங்களில் வியூகத்தின் அடிப்படையில் பணியாற்ற வேண்டும். அவர்களின் தொண்டர்களையும், அநீதிக்கு எதிராக போராடிய மக்களையும் பலப்படுத்த வேண்டும்.  தங்களுக்கு வசதிபட்ட இடத்திலிருந்து வெளியே வந்து, தெருக்களில் இறங்கி, மக்களின் வலி மற்றும் துயரங்களை அனுபவித்து வாழ வேண்டும்." என்று சொல்லியிருக்கிறார்.