கடப்பாரை! ஈரச்சாக்கு! நகைக்கடை ஓட்டை! லலிதா ஜூவல்லரியை எய்ட்ஸ் முருகன் மொட்டை அடித்தது இப்படித்தான்!

திருச்சி லலிதா ஜூவல்லரியில், 28 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் சுவரை உடைக்கும் சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க, கடப்பாரை கம்பியில் ஈரமான கோணிப்பையை சுற்றி சுவற்றில் துளையிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.


திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் 2 ந்தேதி நள்ளிரவு சுவற்றில் துளையிட்டு புகுந்த கொள்ளையர்கள் 28 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். 

இந்த தொடர்பாக, மணிகண்டன் என்பவர் 4 கிலோ நகையுடன் கைதான நிலையில், நகை திருட்டுக்கு மூல காரணம் முருகன் என்பவரின் தலைமையிலன கும்பல் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் முருகனை பிடிக்க டெல்லி விரைந்துள்ளது காவல்துறை.

சம்பவத்தன்று இரவு 7:30 மணி அளவில் நகைக்கடைக்கு மின்இணைப்பு துண்டிக்கப்பட்ட நேரத்தில் 3 பேர் சுவர் ஏறிக்குதித்து ஜோசப் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து கடையின் பின்புறம் புதர் மண்டிய பகுதியில் பதுங்கி உள்ளனர்.

இரவு கடை அடைக்கப்பட்ட பின்னர் சுவற்றில் துளை போட முனைப் பகுதியை தவிர முழுவதும் ஈரச்சாக்கினால் சுற்றி எடுத்துச்சென்ற சிறிய அளவிலான கடப்பாரை மீது சுத்தியலால் மெல்ல மெல்ல அடித்து, சுவரை சரிவாக பகுதி பகுதியாக பெயர்த்து எடுத்து ஒரு ஆள் செல்லும் வகையில் துளையிட்டுள்ளனர்.

அதிகாலை 28 கிலோ நகையுடன் வெளியில் சென்றதும் காரில் ஏறி கொள்ளிடம் ஆற்றுப் பகுதிக்கு சென்று நகைகளை பங்கு போட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதையடுத்த இந்த வழக்கில் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.