திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் 36 மணி நேரத்தில் போலீசார் துப்பு துலக்கி கொள்ளையர்களை கைது செய்துள்ளனர்.
எய்ட்ஸ் முருகன் போட்ட பிளான்! 36 மணி நேரத்தில் சிக்கிய லலிதா ஜூவல்லரி கொள்ளையர்கள்! திக் திக் புலன் விசாரணை!

லலிதா ஜூவல்லரி கொள்ளை அடிக்கப்பட்ட மறு நாள் காலையில் ஸ்பாட்டை ஆய்வு செய்த உடனே போலீசார் வட மாநில கொள்ளையர்கள் கைவரிசை என்று முடிவுக்கு வந்தனர். இதனை அடுத்து விடுதிகள், ரயில்கள், ரயில் நிலையங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த நிலையில் தான் கொள்ளை தொடர்பான புகைப்படங்களை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி துப்பு துலக்குமாறு திருச்சி ஆணையர் அமல்ராஜ் கேட்டுக் கொண்டார்.
உடனடியாக திருவாரூர் காவல் நிலையத்தில் இருந்து ரெஸ்பான்ஸ் வந்தது. கொள்ளை அடித்திருக்கும் விதத்தை வைத்து பார்க்கும் போது எய்ட்ஸ் முருகன் ஸ்டைல் போல் இருப்பதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து எய்ட்ஸ் முருகன் வழக்கை போலீசார் தூசி தட்டினர். அப்போது தான் கேஸ் வெல்டிங் எந்திரத்தின் உதவியுடன் முருகன் சுவற்றை துளையிடும் விதத்தை அறிந்து கொண்டனர்.
முருகன் கொள்ளை அடிக்கும் ஸ்டைலும் லலிதா ஜூவல்லரி கொள்ளையும் ஒத்துப்போனது. உடனடியாக அலர்ட் ஆன போலீசார் திருவாரூர் எஸ்பியை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறினர். எய்ட்ஸ் முருகன் எப்போதும் கொள்ளையை அரங்கேற்றும் முன்பு தனது சொந்தஊருக்கு வந்து தனது உறவினர்களுக்கு தேவையான அளவிற்கு பணத்தை கொடுப்பது வழக்கம்.
அதே போல் கொள்ளை அடிக்கவும் தனது உறவினர்களில் வசதியானவர்களை அழைத்துச் செல்வான். இதனால் முருகன் உறவினர்களை போலீசார் கண்காணிக்க ஆரம்பித்தனர். அவர்களில் சுரேஷ் என்பவன் மட்டும் மிஸ் ஆன தகவல் போலீசுக்கு கிடைத்துள்ளது- கடந்த ஒரு மாத காலமாகவே அவன் அடிக்கடி திருச்சி சென்று வந்ததையும் உறவினர்களில் வேறு சிலர் உலறியுள்ளனர்.
இதனை அடுத்து திருவாரூரை சுற்றி வலை விரித்து போலீசார் காத்திருந்தனர். விளமல் பகுதியில் திருவாரூர் டவுன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாரத நேரு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இரவு சுமார் 10,30 மணி அளவில் வேகமாக வந்த டூ வீலர் ஒன்று தொலைவில் யு டர்ன் அடித்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த பாரத நேரு உடனடியாக தனது டீமுடன் விரைந்து அந்த டூ வீலரை மடக்கினர். அப்போது பின்புறம் அமர்ந்திருந்தவன் வேகமாக இறங்கி அருகாமையில் உள்ள புதரில் ஓடி மறைந்துள்ளான். ஆனால் டூ வீலரை ஓட்டி வந்த மணிகண்டன் சிக்கினான். போலீசை பாத்திர மாத்திரத்திலேயே அவன் உண்மையை கக்கியிருக்கிறான்.
உடனடியாக தகவல் திருச்சி ஆணையர் அமல்ராஜூக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் துணை ஆணையர் மயில்வாகனை திருவாரூருக்கு அனுப்பி வைத்தார். நகைகளை சோதனை செய்த போது அவைகள் லலிதா ஜூவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்டது உறுதியானது. இதனை தொடர்ந்து மணிகண்டனை விசாரிக்க வேண்டிய விதத்தில் போலீசார் விசாரித்தனர்.
அப்போது எய்ட்ஸ் முருகன் தலைமையில் கொள்ளையை அரங்கேற்றியதை ஒப்புக் கொண்டான் மணிகண்டன். மேலும் வட மாநில கொள்ளையர்கள் போல் இருக்க வேண்டும் என்று அவர்கள் அணியும் ஜீன்ஸ், ஜர்கின் வாங்கியதாகவும் போலீசாரை குழப்ப மிருகங்களின் முகமூடி அணிந்ததாகவும் அவன் கூறியுள்ளான்.
மேலும் ஒரு மாத காலம் திருச்சியில் முகாமிட்டு சிசிடிவி கேமராக்கள் இல்லாத சாலையை தேர்ந்தெடுத்து கொள்ளையடித்துவிட்டு தப்பியதாகவும், இந்த தைரியத்தில் தான் கொள்ளை அடித்த நகைகளுடன் எனது சொந்த ஊருக்கு வந்து சிக்கிக் கொண்டதாகவும் கூறியுள்ளான். இதனை அடுத்து திருவாரூரையே ஜல்லடையாக ஜலித்த போலீஸ் எய்ட்ஸ் முருகனின் உறவினர் சுரேஷையும் பிடித்தனர்.
எய்ட்ஸ் முருகன் வங்கிக் கொள்ளையில் கெட்டிக்காரன். அதுவும் வட மாநிலங்களில் தான் இவன் கைவரிசை காட்டுவான். அங்கு கொள்ளையடித்துவிட்டு திருவாரூர் வந்து நன்றாக செலவு செய்துவிட்டு மீண்டும் தொழிலுக்கு சென்றுவிடுவான். அவன் மீது 100 வழக்குகள் இருக்கும் நிலையில் வட மாநிலங்களில் அவனுக்கான பிடி இருகியுள்ளது.
இதனால் தான் தமிழகத்தில் லலிதா ஜூவல்லரியை எய்ட்ஸ் முருகன் தேர்வு செய்ததாக கூறுகிறார்கள். ஆனால் அவன் தற்போது எங்கிருக்கிறான் என்று அவனுடன் சேர்ந்து கொள்ளையடித்து சிக்கிய மணிகண்டன் சுரேஷூக்கு தெரியவில்லை. இதனால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.