பிரசவத்திற்கு சேர்க்க மறுத்த ஹாஸ்பிடல்! வராண்டாவிலேயே குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி! பரிதாப சம்பவம்!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் போதிய வசதிகள் இல்லாததால் பிரசவம் பார்க்க மருத்துவர்கள் மறுத்த நிலையில் வராண்டாவிலேயே ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.


பொதுவாகவே அரசு மருத்துவமனை என்றாலே இலவசம் என்பதற்காக அனைத்து ஏழை எளிய மக்களும் வந்து வைத்தியம் பார்த்து செல்லும் அதே வேளையில்தான் படுக்கை வசதி, மருத்துவ உபகரண வசதி குறைபாடு போன்ற குற்றச்சாட்டுகளும் தொன்று தொட்டு வருகின்றன.

உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் அருகே உள்ளது ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனை. நிறைமாத கர்ப்பிணியான ஒருவர் எந்நேரமும் குழந்தை பிறக்கலாம் என்ற சூழ்நிலையில் பிரசவலியோடு அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

ஆனால் போதிய படுக்கைகள் இல்லையென்றும் வேறு மருத்துவமனைக்கு சென்று பிரசவம் பார்த்துக் கொள்ளுமாறும் அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் கூறியதாக தெரிகிறது. ஆனால் ஏழ்மை நிலையில் உள்ள அந்த பெண் மற்றொரு மருத்துவமனைக்கு செல்ல வசதி இல்லாததாலும் பிரசவ வலி அதிகம் இருக்கவே அங்கிருந்த நகர முடியாமலும் அவதிப்பட்டார்.

அவருடைய வேதனையை பார்த்த அங்கிருந்தவர்கள் உதவ முயற்சிக்க நினைத்தாலும் தங்களால் உதவி செய்யமுடியாமல் தவித்தனர். இதையடுத்து அங்கே வலியில் சுருண்டு விழுந்த அந்த பெண்ணுக்கு மருத்துவமனை வளாகத்திலேயே பிரசவம் நடைபெற்றது.

அரசு மருத்துவமனை வராண்டாவில் குழந்தை பெற்றெடுத்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து மருத்துவமனையின் அவலங்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளர்.

இந்த வீடியோ வைரலாக பரவ அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து விசாரணை நடத்த பரூக்காபாத் மாவட்ட ஆட்சியர் மோனிகா அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.

இது குறித்து சமுக ஆர்வலர்கள் கூறும்போது ஒரு மாவட்ட ஆட்சியருக்கு எந்தந்த மருத்துவமனைகளில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என தெரியாதா இதுபோன்று யாராவது உண்மையை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வரும்போது தான் நடவடிக்கை எடுப்பது போல் உத்தரவிடுவார்களான என கேள்வி எழுப்புகின்றனர். 

எது எப்படியோ உலகிற்கு வரும்போதே அரசு மருத்துவர்களை, செவிலியர்களை அரசாங்கத்தை ஆட்டம் காண வைத்த அந்த குழந்தை அதே மருத்துவமனையில் தாயுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நிம்மதி பெருமூச்சுடன் தாய்ப்பால் குடித்து வருகிறது.