மாயாற்றில் கரைபுரண்ட வெள்ளம்! மிதந்தபடியே வந்த பெண் சடலம்! காண்போரை கலங்க வைக்கும் சம்பவம்!

ஈரோடு: வெள்ள நீரில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மரக்கட்டையில் கட்டி மலைவாழ் பழங்குடியினர் இழுத்துச் செல்லும் காட்சி வைரலாகி வருகிறது.


சத்தியமங்கலம் அருகே உள்ள தெங்குமரஹாடா, அள்ளிமாயார் உள்ளிட்ட மலைக்கிராமங்களை சுற்றிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஒடுகிறது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் கிடையாது. நகரத்துக்குப் போக வேண்டுமெனில், 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்துதான் செல்ல வேண்டும்.

இல்லை எனில் ஊரின் மறுபுறத்தில் ஓடும் மாயாற்றை கடந்துதான் செல்ல வேண்டும். மாயாறு சாதாரண நாட்களில் இயல்பாக இருந்தால் பரிசலில் செல்லலாம். ஆனால், தற்போது மழை பெய்து காட்டாற்று வெள்ளம் அதில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், மாயாற்றில் பரிசல் பயணம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அங்குள்ள அள்ளிமாயார் கிராமத்தைச் சேர்ந்த நீலியம்மாள் எனும் பெண் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதையடுத்து, அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆம்புலன்ஸ் வழியாக சடலத்தை கல்லம்பாளையம் வரை கொண்டு வந்த நிலையில், வழியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் மாயாற்றை எப்படி கடப்பது என குழப்பமடைந்தனர். நீண்ட யோசனைக்குப் பிறகு, நீலியம்மாளின் சடலத்தை மரக்கட்டையில் கட்டி மாயாற்றில் 3, 4 பேர் பிடித்துக் கொண்டு, நீச்சலடித்தபடியே எடுத்துச் சென்றனர். இந்த வீடியோ  தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

நவீன தொழில்நுட்ப வசதிகளும், போக்குவரத்து வசதிகளும் வந்துவிட்ட இந்த காலத்திலும் மரக்கட்டையில் சடலத்தை கட்டி, மலைவாழ் மக்கள் சடலத்தை எடுத்துச் சென்ற சம்பவம் பார்ப்பவர்களை கண்கலங்க வைப்பதாக உள்ளது. குறிப்பிட்ட மலைவாழ் கிராமத்தினருக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்துதர வேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.