சங்கிலி அறுத்த திருடன்... காலை வாரிவிட்டு பிடித்த வீரப்பெண்..! கரட்டுப்பட்டி வசந்திக்குப் பாராட்டு.

திண்டுக்கல் அருகே கொள்ளையனின் காலை வாரிவிட்டு மடக்கிப் பிடித்த வீரப்பெண்மணி வசந்திக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கரட்டுபட்டியை சேர்ந்தவர் மணி. இவர் நேற்று முன்தினம் இரவு உறங்கிக் கொண்டிருந்தபோது வளர்ப்பு நாய் சத்தமிடவே என்னவென்று பார்க்க வெளியே சென்றுள்ளார். வெளியே சென்ற கணவன் நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவருடைய மனைவி வசந்தி வீட்டுக்கு வெளியே சென்று பார்த்துள்ளார்.

அப்போது மர்ம நபர்கள் இரண்டு பேர் தெருவில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த நபர்களில் ஒருவன் வேகமாக ஓடி வந்து வசந்தியின் கழுத்திலிருந்த சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளான். உடனே சுதாரித்த வசந்தி கொள்ளையனின் காலை வாரிவிட்டு அவனை ஓடவிடாமல் மடக்கிப் பிடித்தார். உடனே அவர் கூச்சலிட்டுக் கத்தியதால் அந்தக் கிராம மக்கள் ஒன்று திரண்டனர். திருடனை மடக்கிப் பிடித்தனர். அதன்பின் பிடிபட்ட கொள்ளையனை விருவீடு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். 

விசாரணையில் பிடிபட்ட கொள்ளையன் கமுதி பகுதியை சேர்ந்த சண்முகம் என தெரியவந்தது. இவர் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. திருடனிடம் இருந்து 50 பவுன் தங்க நகைகளை விருவீடு காவல்துறையினர் கைப்பற்றி சண்முகத்தை கைது செய்தனர். திருடனை தைரியமாகப் போராடி பிடித்த கரட்டுப்பட்டி வசந்தியை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்