வீட்டுக்கு வேலைக்குனு கூட்டிட்டு போய், பிராத்தல் பண்ணச் சொல்றாங்க! குவைத்தில் கதறும் திருச்சி குடும்ப பெண்கள்!

குவைத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் தமிழக பெண்களை மீட்கவேண்டும் என திருச்சி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 3 பெண்கள் தங்களது குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக வெளிநாட்டிற்கு சென்று பணிபுரிய முடிவெடுத்தனர். இதையடுத்து நாளிதழில் வந்த விளம்பரம் மூலம் திருவாரூரை சேர்ந்த ஏஜெண்ட்டுகளை அணுகி உள்ளனர். இதையடுத்து பாஸ்போர்ட் விசா ஆகியவற்றை ஏற்பாடு செய்து திருவாரூரைச் சேர்ந்த ஏஜென்ட்டுகள் பக்ருதீன், அசாருதீனை ஆகியோர் 3 பெண்களையும் குவைத்திற்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு வீட்டு வேலை செய்ய வேண்டும் எனவும் நல்ல சம்பளம் கிடைக்கும் எனவும் கூறி கடந்த செப்டம்பர் மாதம் குவைத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் குவைத்திற்கு சென்ற பெண்கள் தங்களது உறவினர்களுக்கு போன் செய்து தங்களுக்கு வீட்டு வேலை தரவில்லை எனவும், அதற்கு பதிலாக பாலியல் தொழில் செய்யுமாறு துன்புறுத்தல் தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் பயந்து போன உறவினர்கள் 3 பேரையும் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புமாறு ஏஜெண்ட்டுகளிடம் கேட்க அவர்கள் 2.75 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் அவர்களை அழைத்து வருவோம் என கூறியுள்ளனர்.

இதையடுத்து அந்த 3 பெண்களின் உறவினர்களும் திருச்சியில் ஐ.ஜி-யிடம் புகார் அளித்துள்ளனர். மொழி தெரியாத இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டுள்ள பெண்களை மீட்கவேண்டும் எனவும் குவைத்துக்கு பெண்களை அனுப்பிய திருவாரூரைச் சேர்ந்த ஏஜென்ட்டுகள் பக்ருதீன், அசாருதீனை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.