நேரு உருவாக்கிய எல்.ஐ.சி.யைத் தனியாருக்கு தாரைவார்ப்பதா?- காங்கிரஸ் அழகிரி கண்டிக்கிறார்

நேரு உருவாக்கிய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கப்போகும் முடிவை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார்.


நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல்செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கை விவரம்:

இந்தியப் பொருளாதாரம் கடந்த சில வருடங்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. உற்பத்திக் குறைவு, வேலைவாய்ப்பு இழப்பு, விவசாயிகளுக்கு பாதிப்புகள் என பல வகைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலன்களை தரும்வகையில் நிதிநிலை அறிக்கை அமையும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2.45 மணி நேரம் நிதிநிலை அறிக்கையை வாசித்து சாதனை படைத்திருக்கிறார். மக்களுக்கான பிரச்சினைகளுக்கு நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்த்த தீர்வு கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம்தான் ஏற்பட்டிருக்கிறது. 

இந்த நிதிநிலை அறிக்கையின்படி, மொத்த வருவாய் ரூபாய் 22 லட்சம் கோடி. ஆனால், மொத்த செலவோ 30 லட்சம் கோடி ரூபாய். இதில் நிதிப் பற்றாக்குறை ரூ. 8 லட்சம் கோடியாக உயர்ந்து மொத்த பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை 3.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், கடந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவிகிதத்திலிருந்து, 4.5 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்து வருகிற நிலையில் 2020-21 ஆம் நிதியாண்டில் 10 சதவிகித வளர்ச்சி ஏற்படும் என்று நிதியமைச்சர் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், வீழ்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிற பொருளாதாரத்தை, 10 சதவிகித வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்வதற்கான எந்த அறிகுறிகளும் நிதிநிலை அறிக்கையில் காணப்படவில்லை.

விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காகக் கூட்டுவேன், விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கும் என்கிற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லை. கடன் சுமையால் பாதிக்கப்படுகிற விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு இல்லை. குறைந்தபட்சம் விவசாயக் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வதாக அறிவித்திருக்கலாம். அதை செய்வதற்குக் கூட பா.ஜ.க. அரசு தயாராக இல்லை. 

மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் உருவாக்கிய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களுக்கு பயன்களைத் தந்துகொண்டிருக்கிற இத்தகைய அமைப்புகளை தனியாருக்குத் தாரை வார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், ரயில்வே துறையில் 150 புதிய ரயில்களை இயக்குவதற்கு தனியாருக்கு அனுமதி வழங்கப்போவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

நான்கு ரயில் நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இத்தகைய அறிவிப்புகளை பார்க்கிறபோது, பொதுத்துறை நிறுவனங்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதற்கான முயற்சியில் நரேந்திர மோடி அரசு இறங்கியிருக்கிறது என்பது தெளிவாகிறது. இது முற்றிலும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான அரசாகவே மோடி அரசு செயல்படுகிறது. 

இந்த நிதிநிலை அறிக்கையில் சிந்துவெளி நாகரீகத்தைப் பற்றி குறிப்பிடும் போது, சரஸ்வதி பெயரை இணைத்து குறிப்பிட்டது அப்பட்டமான இந்துத்வா கொள்கையின் வெளிப்பாடாகும். மேலும், தமிழகத்திற்கு பயன் தருகிற எத்தகைய அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. சென்னை - பெங்க;ர் விரைவு சாலை திட்டம் குறித்து அறிவிப்பு தான் வெளிவந்திருக்கிறதே தவிர, நிதி ஒதுக்கப்படவில்லை.

நிதிநிலை அறிக்கையை ஒட்டுமொத்தமாக பார்க்கிற போது வளர்ச்சியை நோக்கமாக இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களால் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கருதுகிறது.” என்று அழகிரி தெரிவித்துள்ளார்.