ரஜினி ரசிகர் மன்ற மேடையில் ஃபுல் மேக்கப்பில் திமுக பெண் நிர்வாகிகள்! அறிவாலயத்துக்கு அதிர்ச்சி கொடுத்த கோவை சம்பவம்!

கோவையில் ரஜினி ரசிகர் மன்றம் நடத்திய நிகழ்ச்சியில் தி.மு.க பிரமுகர்கள் கலந்து கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


முரசொலி படிப்பவர்கள் தி.மு.க-காரர்கள் என்றும் துக்ளக் படிப்பவர்கள் அறிவாளிகள் என்றும் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் மேடையி பேசியது விமர்சனத்துக்கு உள்ளானது. இதனால் தி.மு.க பிரமுகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. கோவை காமாட்சிபுரத்தில் அன்புள்ள ரஜினிகாந்த் நற்பணி மன்றம், ஆடல் இளவரசன் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் தி.மு.க மாநில மகளிர் தொண்டர் அணியின் துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் மற்றும் தி.மு.க கோவை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மாலதி ஆகியோர் பங்கேற்றிருந்தனர். ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த மேடையில் திமுகவினர் அமர்ந்திருந்தது அனைவரையும் கவனத்தில் ஈர்த்தது. கொங்கு மண்டலத்தில் தி.மு.க பலவீனமாக உள்ள நிலையில் அ.தி.மு.க ஸ்லீப்பர் செல்கள், தி.மு.க-வில் அதிகம் இருக்கிறார்கள்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலிலும், தி.மு.க பிரமுகர்கள் அ.தி.மு.க-வுக்கு வாக்களித்து துரோகம் செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விமர்சனத்திற்கு பதில் அளித்த, மீனா ஜெயக்குமார், ``சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியை நடத்தியது தி.மு.க வார்டு செயலாளர். அதில் பங்கேற்க பல்வேறு கட்சிப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்துதான் அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. எங்களுக்கும், அழைப்பு விடுத்ததால்தான் கலந்துகொண்டோம்.

அது சமத்துவ பொங்கல். நான் எங்கு போனாலும் தி.மு.க பிரமுகராகத்தான் செல்வேன். என்று கூறினார். இதுகுறித்து மாலதி தெரிவிக்கையில் ``அங்குள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால்தான் கலந்துகொண்டோம். அதில், ரஜினி ரசிகர் மன்றத்தினர், மக்கள் நீதி மய்யத்தினர், தி.மு.க எல்லாரும் இணைந்து நிகழ்ச்சி நடத்தியுள்ளனர் என்று கூறினர்.