மொத்தமா 40 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும்.. பா.ம.க.வுக்குப் போட்டியாக கொங்கு போராட்டம் ஆரம்பமா..?

தேர்தல் வரும்போதுதான் ராமதாஸ் அய்யாவுக்கு வன்னியர்கள் என்று ஒரு கூட்டம் இருப்பதும், அவர்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற எண்ணமும் வரும். உடனே போராட்டத்தை அறிவித்துவிடுவார். அந்த வகையில், இப்போது போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்.


இந்த விஷயத்தை இப்போது கொங்கு கட்சியின் ஈஸ்வரனும் கையில் எடுத்திருக்கிறார். அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை இது. 

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற அனைத்து சாதிகளும் ஒன்றிணைந்து மொத்த ஜனத்தொகையாக 55 சதவீதம் இருக்கின்றார்கள். தமிழகத்தின் 55 சதவீத மக்களுக்கான இட ஒதுக்கீடாக 26.5 சதவீதம் வழங்கப்படுகிறது. கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழகத்தில் அதிகமான பாதிப்பை சந்தித்து கொண்டிருப்பது பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற சாதிகளை சார்ந்தவர்கள் தான். பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கின்ற சாதிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டிய சூழ்நிலை நெருங்கி கொண்டிருக்கிறது. 

பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்துதான் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீதம் உள் ஒதுக்கீடாக ஒதுக்கப்பட்டது. இவ்வாறு கொடுக்கப்பட்ட உள் ஒதுக்கீடுகளால் தான் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 26.5 சதவீதமாக இன்றைக்கு இருக்கிறது. 

55 சதவீத மக்களுக்கான 26.5 சதவீதமாக இருக்கின்ற இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக மாற்றினால்தான் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற சாதிகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் ஓரளவுக்காவது வாய்ப்பு கிடைக்கும். பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற சாதிகள் ஒன்றிணைந்து களத்திற்கு வந்து போராடினால்தான் பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமை கிடைக்கும் என்றால் அதற்கும் நாங்கள் தயாராக தான் இருக்கிறோம். அதனால் அரசு பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அப்படி போடுங்க சார்..