உயர் அதிகார வர்க்கத்தால் இட ஒதுக்கீட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து..! எச்சரிக்கும் கி.வீரமணி

உயர் அதிகார வர்க்கத்தில் உயர்ஜாதி பார்ப்பனர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த ஆதிக்கத்தை வீழ்த்த அனைத்துத் தரப்பினரும் அணிதிரள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.


திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. திப்பேந்து அதிகாரி மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் அளித்துள்ள பதில் அதிர்ச்சி அளிக்கிறது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் சட்டப்படி இட ஒதுக்கீடு இருப்பதாக சொல்லப்பட்டாலும், அவர்களுக்கு உரிய சட்டப்படியான இட ஒதுக்கீடு விகிதாசாரம் அளிக்கப்படவில்லை என்பது இதன்மூலம் வெட்ட வெளிச்சமாக, அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிட்டதே!

உண்மை விவரம் இவ்வாறு இருக்க, எவ்வளவு காலத்துக்கு இன்னும் இட ஒதுக்கீடு என்று கேள்வி கேட்போர் ஒருபக்கம்; உயர்ஜாதியினரில் ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்று கூறி அவசர அவசரமாக ஒரு வார காலத்திற்குள் சட்டம் இன்னொரு பக்கம் என்பது - எண்ணிப் பார்க்கவே முடியாத -ரத்தக் கொதிப்பு ஏற்படுத்தக் கூடிய உயர்ஜாதி பார்ப்பனர் ஆதிக்கம் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

இந்த உயர்ஜாதி ஆதிக்கம் போதாது என்று கூறி, தனியார்த் துறைகளிலிருந்தும் இணைச் செயலாளர்கள் பதவிக்கு நேரிடையாக நியமனம் என்பது சமூக அநீதியின் உச்சம் அல்லவா! இத்தகைய நியமனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்பது கவனிக்கத்தக்கதாகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஏணி வைத்தாலும் எட்ட முடியாத அளவுக்கு வெகுச் சிறுபான்மையினரான பார்ப்பன உயர்ஜாதியினரின் அதிகார வர்க்க ஆதிக்கம் உச்சத்தில் கொடி கட்டிப் பறக்கிறது.

இந்த இடைவெளியை நிரப்புவது என்பதுதான் உண்மையான சமூகநீதியாக இருக்க முடியும். இதைப்பற்றி நாடாளுமன்றத்தில் சமூகநீதியில் அக்கறை உள்ள கட்சிகளின் உறுப்பினர்கள் போர்க் குரல் எழுப்பிடவேண்டும். இட ஒதுக்கீடு விலக்கு அளிக்கப்பட்டுள்ள அத்துணைத் துறைகளிலும் சட்டப்படியான விகிதாச்சாரத்தில் இட ஒதுக்கீடு கண்டிப்பாகப் பின்பற்றப்படவேண்டும்.

இட ஒதுக்கீடு செயல்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகள் ஆன நிலையிலும், உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற நிலையில், தேசிய புதிய கல்வி என்றும், ‘நீட்’ என்றும் கூறி ஒடுக்கப்பட்ட மக்கள் தலையெடுக்க முடியாத அளவுக்குத் தடைச் சுவர்களை எழுப்பி வருவது எத்தகைய அபாயகரமான பார்ப்பனத் தன்மை கொண்டது என்று எச்சரிக்கிறார் வீரமணி.