சபரிமலைக்கு பெண்களை அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர்! பினரயி அதிரடி!

சபரிமலைக்கு பெண்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் அதிரடி முடிவெடுத்துள்ளார்.


கார்த்திகை மாதம் முழுவதும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறந்திருக்கும். இந்த சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு இருமுடி கட்டி வருவது வழக்கம். இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே கேரள அரசு ஏற்பாடுகளை செய்து வரும். அந்த வகையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் முன்கூட்டியே தாங்கள் எந்த வழியாக சன்னிதானத்தை அடைய உள்ளார்கள் என்பதை கேரள போலீசாரின் பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

   அந்த வகையில் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் பக்தர்கள் கார்த்திகை மாதம் சபரிமலைக்கு வர உள்ளதாக பதிவு செய்துள்ளனர். இவர்களில் 560 பெண்களும் அடக்கம். இந்த பெண்கள் அனைவருமே 10 வயதுக்குமேற்பட்ட 50 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இவர்களை சபரிமலைக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வது என்கிற முடிவுக்கு கேரளாவை ஆளும் பினரயி விஜயனின் இடதுசாரி அரசு உறுதியாக உள்ளது.

   ஆனால் பாரம்பரியத்தை காரணம் காட்டி பத்து வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை சபரிமலை சன்னிதானத்தில் அனுமதிக்க முடியாது என்று கேரளாவில் பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. சபரிமலையில் நடை திறக்கும் சமயத்தில் பக்தர்கள் போல் வரும் பா.ஜ.கவினர் ஆங்காங்கே பெண்களை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பெண்களால் சபரிமலை சன்னிதானத்தை அடைய முடியவில்லை.



   இந்த நிலையை மாற்ற திருவனந்தபுரம் அல்லது கொச்சியில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் பெண்களை சபரிமலை சன்னிதானத்திற்கு நேரடியாக அழைத்துச் செல்ல கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இருமுடி கட்டி பக்தர்களாக வருபவர்களை மட்டுமே இந்த முறையில் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு என்று பிரத்யேக வரிசை அமைத்து அவர்களை ஐயப்பனை தரிசிக்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

   ஹெலிகாப்டர் மூலம் பெண்கள் சன்னிதானத்திற்கு அழைத்துவரப்பட்டால் போராட்டக்காரர்களால் தடுக்க முடியாது. ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவிலின் மேல் சாந்தி அவர்களை சன்னிதானத்திற்குள் அனுமதிப்பாரா? என்பது தான் தற்போது எழுந்துள்ள கேள்வி.