ராகுலிடம் சபாஷ் வாங்கிய கேரள மாணவி! கலக்குரே ராகுல்!

தமிழ்நாட்டில் ராகுல் காந்தி உரையை தங்கபாலு மொழிபெயர்த்து நீங்காத பெயர் பெற்றதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.


அந்த நிகழ்ச்சியில் இருந்து யார் பாடம் கற்றுக்கொண்டார்களோ, இல்லையோ ராகுல்தெளிவாக இருக்கிறார். ஆம், அரசியல்வாதிகளை நம்புவதைவிட, மாணவிகளே போதும் என்ற முடிவுக்கு ராகுல்காந்தி வந்திக்கிறார்.

வயநாடு மாவட்டம் வதூரில் உள்ள கருவர்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பரிசோதனைக்கூடத்தை திறந்து வைக்கச் சென்றார், தொகுதியின் எம்.பி ராகுல் காந்தி. பள்ளி விழாவில் உரையாற்றத் தொடங்கும் போது தனது உரையை பள்ளி மாணவர்களில் யாராவது ஒருவர் மொழிபெயர்க்க விரும்பினால் முன்வரலாம் என அழைத்தார்.

அப்போது தைரியமாக, 11-ம் வகுப்பைச் சேர்ந்த மாணவி சஃபா செபின் மொழிப்பெயர்க்க முன்வந்தார். ராகுல் காந்தியின் கேரளப் பயணங்களின் போது வழக்கமாக மொழிபெயர்க்கும் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான கே.சி.வேணுகோபால், அதனை சந்தோஷமாக சிரித்து ஏற்றுக்கொண்டார். 

மேடை ஏறிய மாணவி சஃபா ராகுலுக்கு வணக்கம் தெரிவிக்க அவரும் பதில் வணக்கம் தெரிவித்தார். தனது சக பள்ளி மாணவர்கள் உற்சாகப்படுத்த மிகவும் சிறப்பான முறையில் ராகுல் காந்தியின் பேச்சை மொழி பெயர்த்தார் அம்மாணவி. உரையின் இறுதியில் மாணவி சஃபா-வை சிறப்பான மொழிபெயர்ப்புக்காகப் பாராட்டினார் ராகுல் காந்தி. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ராகுல் காந்தி பேசியபோது, “நீங்கள் உண்மையிலேயே விஞ்ஞானியாக இருக்க ஒரே வழி மற்றவர்களின் யோசனைகளையும் கூர்ந்து கவனிப்பதே. நீங்கள் மற்றவர்கள் பேசுவதையும் கவனமாகக் கேட்க வேண்டும். மற்றவர்களின் கருத்துக்கள், கலாச்சாரங்கள், மதங்கள், மொழிகள் ஆகியவற்றை நீங்கள் மதிக்க வேண்டும்’’ என்றார்.

ராகுலின் முயற்சிக்கு பாராட்டு குவிகிறது.