65 வயதில் கணவரின் 67 வயது பால்ய நண்பனை 2வது திருமணம் செய்து கொண்ட லட்சுமி அம்மாள்..! அனைவரையும் நெகிழ வைத்த நிகழ்வு!

திருவனந்தபுரம்: முதியோர் இல்லத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட முதியவர்களை பற்றி கேரள ஊடகங்களில் பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.


திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ராமவர்மாபுரம் பகுதியில், கேரள மாநில அரசு சார்பாக, ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லம் நடத்தப்படுகிறது. இங்கு தங்கியுள்ள கோச்சனியன் மேனன் (67 வயது) மற்றும் லட்சுமி அம்மாள் (65 வயது) ஆகியோர், காதலில் விழுந்தனர். மனதார காதலித்த இருவரும் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தனர்.

இருவருக்கும் 30 ஆண்டுகளாக அறிமுகம் இருந்துள்ளது. இதில், லட்சுமி அம்மாளின் கணவருக்கு கோச்சானியன் உதவியாளராக பணிபுரிந்திருக்கிறார். ஆனால், 21 ஆண்டுகளுக்கு முன், லட்சுமியின் கணவர் இறந்துவிட்டார். அதன்பின், கோச்சானியனுக்கும், லட்சுமிக்கும் இடையே தொடர்பில்லாமல் போனது. இதையடுத்து, சமீபத்தில் ராமவர்மாபுரம் முதியோர் காப்பகத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். உடனடியாக, அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.  

இவர்களின் திருமணத்தை வெகு விமரிசையாக செய்ய கேரள அரசு திட்டமிட்டது. இதன்படி, அம்மாநில வேளாண் துறை அமைச்சர் சுனில் குமார் தலைமையில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சனிக்கிழமை காலை 11 மணியளவில் கோச்சனியன், லட்சுமியை கரம்பிடித்தார். மணமக்கள் இருவரும் உற்சாகமாக, திருமண அலங்காரத்தில் காணப்பட்டனர். அவர்களின் திருமணம் சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பும் செய்யப்பட்டது. பலரும் நேரில் வந்து வாழ்த்தியதோடு, சமூக ஊடகங்கள் வழியாகவும் இந்த தம்பதியை வாழ்த்தி வருகின்றனர்.  

இந்த திருமணம் பற்றி மணமகள் லட்சுமி அம்மாள் பேசுகையில் ''இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்வோம் என தெரியவில்லை. ஆனால், எங்களால் முடிந்த வரை ஒன்றாக வாழ்வோம். எனக்கு பாதுகாப்பாக ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை தற்போது கிடைத்துள்ளது. அது மனதிற்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது,'' என்கிறார்.  

காதலுக்கு வயதில்லை என்பதை இவர்களின் திருமணம் நிரூபித்துக் காட்டியுள்ளதாக, சமூக ஊடகங்களில் பலரும் கமெண்ட் பகிர்ந்து வருகிறார்கள்.