திருவனந்தபுரம்: தென்னிந்தியாவின் முதல் ஏர்போர்ட் தீயணைப்பு வீராங்கனை என்ற சாதனையை கேரள பெண் படைத்துள்ளார்.
அத்தனை பேரும் ஆண்கள்..! நான் ஒருத்தி தான் பெண்! வயது 28! எடை 55 கிலோ! சாதித்த ரம்யா! எப்படி தெரியுமா?
கேரளாவைச் சேர்ந்தவர் ரெம்யா ஸ்ரீகாந்தன். 28 வயதாகும் இவருக்கு, திருமணமாகி, ஒரு குழந்தையும் உள்ளது. ஆனாலும், எதாவது சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்த ரெம்யா, சமீபத்தில் ஏர்போர்ட் அதாரிட்டி ஆஃப் இந்தியாவின் தீயணைப்புப் பிரிவில் வேலைக்குச் சேர முயற்சித்தார்.
இதற்காக சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்று, வெற்றிகரமாக உள்ளே நுழைந்தார். தற்போது பயிற்சியையும் நிறைவு செய்து, சென்னை விமான நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார். விரைவில், தான் பணிபுரியும் சென்னைக்கே, கணவர் மற்றும் மகளையும் அழைத்து வர ரெம்யா திட்டமிட்டுள்ளாராம் எம்டெக் படித்துள்ள ரெம்யா, தென்னிந்தியாவிலேயே ஏர்போர்ட் தீயணைப்புத் துறையில் பணிபுரியும் முதல் பெண் என்ற சாதனை படைத்துள்ளார்.
அதேசமயம், இந்திய அளவில் ரெம்யாவையும் சேர்த்து மொத்தம் 3 பெண்கள் ஏர்போர்ட் தீயணைப்புத் துறையில் பணிக்குச் சேர்ந்துள்ளனர். அவர்களில் ஒருவர் வடக்கு பிராந்தியத்தையும், மற்றொருவர் மேற்கு பிராந்தியத்தையும் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். இதுபற்றி ரெம்யா கூறுகையில், ''ஏர்போர்ட் அதாரிட்டி ஆஃப் இந்தியா நடத்தும் தீயணைப்புத் துறைக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்று, பிறகு உடல் தகுதித் தேர்வு, மகிந்திரா பொலிரோ டிரைவிங் தேர்வு உள்ளிட்டவற்றையும் வெற்றிகரமாக நிறைவு செய்தேன்.
மொத்தம் 91 பணியிடங்கள் நடப்பாண்டில் காலியாக இருந்தன. இதில் பெண்களுக்கு என தனி இட ஒதுக்கீடு கிடையாது. எனவே, அவற்றில் ஏதேனும் ஒன்றை கைப்பற்ற கடுமையாகப் போராடினேன். கை மேல் பலன் கிடைத்தது.இதுபோன்ற பணிகளில் சேர எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது, பெண்களை விட ஆண்கள் உடல் பலம் கொண்டவர்கள் என்பதால் தீயணைப்புத் துறையில் எளிதில் பணி கிடைத்துவிடும். அந்த நிலையை மாற்றி, உடல் வலிமையை வெளிப்படுத்த பெண்களும் தகுந்த பயிற்சி செய்தால் என்னைப் போல சாதனை படைக்கலாம்,'' என்றார்.