கம்யூனிஸ்ட்களை ஓட ஓட விரட்டிய பாட்டுக்காரி ரம்யா! முதல் பழங்குடியின பெண் எம்பியானார்!

கம்யூனிஸ்ட் கோட்டையான ஆலத்தூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளரான பழங்குடியினப் பெண் அரசியல் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


கேரள மாநிலத்தில் இளம் தலைவர்களை உருவாக்க ராகுல் காந்தி  டேலண்ட் ஹண்ட் நிகழ்ச்சியை நடத்தினார். காங்கிரஸ் கொள்கைகள் மீது பற்றும் ஆர்வமும் உள்ள இளைஞர்களைக் கண்டறிந்து உருவாக்கும் இந்த நிகழ்ச்சியின் போது தனது பேச்சு திறனால் கவர்ந்து காங்கிரஸில் இணைகிறீர்களா என ராகுலே கேட்கும் அளவுக்கு வந்தவர்தான் ரம்யா ஹரிதாஸ். 

தந்தை ஹரிதாஸ் தினசரி கூலித் தொழிலாளி. தாய் ராதா டெய்லராக இருந்துகொண்டே காங்கிரஸில் பணியாற்றி வந்தார். இதனால் ரம்யாவுக்கு ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸின் மீது பற்று இருந்தது. மேலும் சமூக சேவகியாகவும் வலம் வரத் தொடங்கினார். கல்லூரி காலம் முடிந்தபின் தனது மலைவாழ் மக்களின் வாழ்வாதாரங்களுக்காகப் போராட ஆரம்பித்த அவருக்கு குன்னமங்கலம் பஞ்சாயத்து பிரசிடென்ட் பதவி கிடைத்தது.

இந்நிலையில் கட்சிப் பணியிலும் ஈடுபட்ட அவர் ஆலத்தூர் வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டார். தான் போட்டியிடுவது சி.பி.எம்மின் கோட்டை என்றோ  10 ஆண்டுகள் எம்பியாக இருக்கும் பி.கே பிஜுவை எதிர்க்கிறோம் என்றோ பயமின்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இசைக்கல்லூரியில் படித்தவர் என்பதால் பாடல் பாடி, மக்களைக் கவர்ந்தார்

இதனை ஏளனம் செய்த சி.பி.எம். கட்சியினர்  பாட்டுக்காரி ரம்யா; இது ஸ்டார் சிங்கர் அல்ல என விமர்சனம் செய்தனர். இதேபோன்று  தன்னிடம் இருப்பது 22,000 ரூபாய் மட்டுமே என அவர் வேட்புமனுவில் குறிப்பிட்டதும் தேர்தல் ஸ்டண்ட் என விமர்சனத்துக்குள்ளானது. தான் பாட்டுக்காரியாக இருப்பதில் பெருமைப்படுவதாகவும், தான் வெற்றி பெறாவிட்டாலும் தனது பாட்டால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தால் தனக்கு மகிழ்ச்சி என்றும் கூறினார்.

வெற்றி பெற்றால் மக்களுக்காக வாழ்நாள் முழ்வது உழைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.  இந்நிலையில் தொகுதி வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கம்யூனிஸ்ட் வேட்பாளரை 1 லட்சத்து 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.