இம்புட்டு சோகத்திலும் புது அணை சேட்டை- கேரளத்துக்கு மாநிலங்களவையில் வைகோ எதிர்ப்பு!

நாடே கரோனா தாக்குதல் அச்சத்தில் மூழ்கியிருக்க, தமிழ்நாட்டை பாதிக்கக்கூடியவகையில் பட்டிசேரி எனும் இடத்தில் கேரள அரசு அணை கட்டிக்கொண்டிருக்கிறது; அதைத் தடுக்கவேண்டும் என்று மாநிலங்களவையில் வைகோ பேசினார்.


இன்று அவையின் சுழிய நேரத்தில், ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ இதைப் பற்றிப் பேசினார். அப்போது, “ தமிழக அரசிடமோ, காவிரி தீர்ப்பு ஆயத்திடமோ இசைவு எதுவும் பெறாமல், கேரள அரசு, பட்டிசேரி என்ற இடத்தில் ஒரு தடுப்பு அணை கட்டிக் கொண்டு இருக்கின்றது. முன்பு அதன் உயரம் 15 அடிகள்தான். இப்போது, 30 மீட்டர் (909 அடிகள்) உயரத்திற்குக் கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இதனால், பாம்பாறு நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்து தமிழ்நாட்டின் அமராவதி அணைக்கு வரவேண்டிய நீர் தடைபடும்.” என்று அவர் குறிப்பிட்டார். ” அமராவதி அணையின் பாசனப் பரப்பு 48,500 ஏக்கர் மற்றும் புதிய பாசனப் பரப்பு 21,500 ஏக்கர் ஆகும். பழைய ஆயக்கட்டுதாரர்களுக்கு 12.66 டிஎம்சி மற்றும் புதிய ஆயக்கட்டுதாரர்களுக்கு 4.97 டிஎம்சி நீர் தேவை.

மேலும், கரூர் பகுதியின் குடிநீர் தேவைக்காக 0.514 டிஎம்சி மற்றும் தொழில் பணிகளுக்காக 0.492 டிஎம்சி நீர் தேவை. எனவே, ஒட்டுமொத்தமாக, ஓர் ஆண்டுக்கு, 18.64 டிஎம்சி நீர் தேவை. காவிரி தீர்ப்பு ஆயம், செங்கலாறு அணையில் இருந்து 0.800 நீர் மட்டுமே கேரளத்திற்கு ஒதுக்கி இருக்கின்றது. ஆனால் அவர்கள் பட்டிசேரியில், 2 டிஎம்சி கொள் அளவிற்கு அணையைக் கட்டுகின்றார்கள். 

1966 முதல் 2019 டிசம்பர் வரை, இதுவரையிலும் அமராவதி அணைக்குப் போதிய நீர் வரவில்லை. இந்நிலையில், கேரள அரசு புதிய அணையைக் கட்டுமானால், தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில், கரும்பு மற்றும் ஏனைய பயிர்களைப் பயிரிடும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, காவிரி தீர்ப்பு ஆயம் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, கேரளம் அணை கட்டுவதைத் தடுத்துநிறுத்தவேண்டும்” என்றும் வைகோ தன் பேச்சில் குறிப்பிட்டார்.