இறந்தவரின் உடல் மீது யாருக்கு உரிமை? கேரளாவில் இரு தேவாலய நிர்வாகங்களுக்கு இடையே நடக்கும் மோதலால் சர்ச்சை.
இறந்தவர் உடலை தோண்டி எடுக்கனும்..! நீதிமன்றம் சென்ற சிரியன் சர்ச்! பதற வைக்கும் காரணம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் இறந்தவரின் உடலுக்கு யார் உரிமை கொண்டாடுவது
என்பது தொடர்பாக, இரண்டு தேவாலய நிர்வாகங்கள் இடையே மோதல்
ஏற்பட்டுள்ளது.
எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் பெய்லி (74 வயது). இவர், சில நாள் முன்பாக, கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்தார். இவர் ஜாக்கோபைட் கிறிஸ்தவர்கள் மரபைச் சேர்ந்தவர் ஆவார். அதேசமயம், இவரது குடும்பம் மலங்காரா சர்ச் நிர்வாக ஊழியத்திற்கு கட்டுப்பட்டவர்கள் ஆவர்.
இந்நிலையில், ஜோசப்பை ஜேக்கோபைட் முறைப்படி அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட மலங்காரா சர்ச்சை சேர்ந்த ஆர்த்தோடாக்ஸ் பிரிவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர். இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த ஜோசப் குடும்பத்தினர், இறுதியாக, போலீஸ் உதவியுடன் குடும்பத்தினர் விருப்பப்படி ஜோசப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆனால், தற்போது புதிய சிக்கல் எழுந்துள்ளது. ஆம், இந்த விவகாரத்தை மலங்காரா சர்ச் நிர்வாகம் மிக எளிதில் விடுவதில்லை என்ற தீர்மானத்துடன் கிளம்பி, இதுபற்றி எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. ஆர்த்தோடாக்ஸ் மரபை பின்பற்றும் தங்களது நிர்வாகத்திற்கு உள்பட்ட செயின்ட் ஜான்ஸ் சர்ச் கல்லறையில் ஜேக்கோபைட் சிரியன் மரபை சேர்ந்தவரின் உடலை புதைத்துள்ளது ஏற்கக்கூடியதல்ல, அவரது உடலை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், ஜோசப் குடும்பத்தார் மட்டுமின்றி கேரள மக்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இறந்து போன ஒருவரை நிம்மதியாக அடக்கம் செய்த பிறகும், விடாமல் துரத்துவது நியாயமற்ற செயல் என பலரும் விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், மலங்காரா சர்ச் ஊழியத்திற்கு உள்பட்டவர்களின் இறப்பு உள்ளிட்ட விசயங்களில் ஆர்த்தோடாக்ஸ் மரபுப்படியான சடங்குகளை செய்வதற்கு உச்சநீதிமன்றம் 2017ம் ஆண்டு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.