மன அழுத்தத்தை குணப்படுத்த கண்ணதாசன் சொல்லும் சிறந்த மருந்து!

ஐயோ! தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருக்கிறது, எவ்வளவு வேலை பாக்கியிருக்கிறது.. அவன் ஏன் இப்படி பண்றன்னு பல்லை கடிக்கிறது, அடிக்கடி தலைவலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், படபடப்பு, பதட்டம். எச்சரிக்கை நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கக் கூடும்.


சின்னச் சின்ன துன்பமெல்லாம் எண்ண எண்ணக் கூடுமடா!  ஆவதெல்லாம் ஆகட்டுமே, அமைதி கொள்ளடா- இது கண்ணதாசனின் கவிதை- அர்த்தமுள்ளது. சிறு கல்லைக்கூடப் பெரிய மலையக்குவது நம் எண்ணங்கள்தான்

இனம்புரியாத கவலை, நம்பிக்கையின்மை, எப்போதும் விரக்தியாகப் பேசுவது, அதிகமாகக் கோபப்படுவது, அதிக கவலை, தூக்கமில்லாமலிருப்பது, பசியின்மை, பிறருடன் பேசுவதைக் குறைத்துக் கொள்வது, அடிக்கடி சோர்ந்து போவது, ஏதோ நடக்கப்போகிறது என்கிற பயத்துடனேயே இருப்பது, தனிமையில் அழுவது, தேவையில்லாமல் பதற்றமடைவது,

சோகமாகவே இருப்பது, நாம் எதற்கும் உபயோகமற்றவர் என்ற எண்ணம் தலைதூக்குவது, சில நேரங்களில் தற்கொலை எண்ணம் ஏற்படுவது இவை யாவும் மனஅழுத்தத்திற்கான அறிகுறிகள்தான். எடை குறைவதும், தேவைக்கு அதிகமான எடை கூடுவதும்கூட மனஅழுத்தத்தின் அறிகுறிகள்தான். 

இதயத்துடிப்பு அதிகரித்தல், அதிகமான வியர்வை, குறிப்பாக உள்ளங்கைகள் வியர்த்தல், மிக வேகமாக மூச்சு விடுதல்,வயிற்றுக் கோளாறுகள், முதுகு வலி, கழுத்திலும் இடுப்பிலும் ஏற்படும் தசைப்பிடிப்பு முதலியவை, அதிக மன அழுத்தத்தால் உடலில் பொதுவாக ஏற்படக் கூடிய அறிகுறிகள். 

நம்முடைய மூளையில் செரட்டோனின், டோப்பமின் என்ற ரசாயனப் பொருட்கள் சுரக்கின்றன. இவற்றின் அளவு சமநிலையில் இருந்தால் பிரச்னை இல்லை. கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால்தான் மனஅழுத்தம் ஏற்படும். 

சில சமயம் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே சிலருக்கு மனஅழுத்தம் தீர்ந்துவிடும். அப்போது இந்த ரசாயனப் பொருட்கள் சமநிலைக்குத் தற்செயலாக வந்திருக்கும். அதனால்தான் பயம், படபடப்பு தானாகவே குறைந்து, மனஅழுத்தம் இல்லாமல் போகின்றது. இது எல்லோருக்கும் சாத்தியமல்ல

நாளாவட்டத்தில், மன அழுத்தம் ஏற்படுகையில் நமது உடலில் சுரக்கும் திரவமான கார்டிசால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து விடுகிறது. மேலும், இன்சுலின் சுரப்பை இது குறைப்பதால், சர்க்கரை அளவு உடலில் அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடலின் எடை கூடத் தொடங்குகிறது.

இதன் காரணமாக அதிக இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டு வலி போன்றவை நம்மைத்தாக்க வாய்ப்பு உள்ளது. உடலின் எதிர்ப்புச் சக்தி குறைவதன் காரணமாக, மற்ற பல வித நோய்களின் தாக்குதலுக்கும் நாம் ஆளாக நேரிடலாம்.

மன அழுத்தம் அதிகரிக்கையில், நம் சிந்தனை, நாம் பிறரிடம் பேசும், பழகும் விதம் எல்லாமே மாறிவிடுகிறது. இதன் காரணமாக வேலைசெய்யுமிடத்திலும் வீட்டிலும் சண்டை சச்சரவு ஏற்பட்டு நிம்மதிக்குலைவு ஏற்படலாம் வரும்முன் காக்க உடற்பயிற்சி

மனஅழுத்தம் ஏற்படாமலிருக்க உடற்பயிற்சிதான் மிகப்பெரிய சிகிச்சை. நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் வாக்கிங் போவதும் நல்ல உடற்பயிற்சிதான். வாக்கிங் என்றால் 45 நிமிடங்கள் தொடர்ந்து சுறுசுறுப்பாக நடக்க வேண்டும்.  யோகா & தியானம்

மனஅழுத்தத்தைக் குறைக்க யோகா வகுப்புகளுக்குப் போகலாம். ஏதோ அரைமணி நேரம் மட்டும் அமைதியாக இருந்துவிட்டு, மற்ற நேரம் முழுக்க டென்ஷனாக இருப்பதில் அர்த்தமில்லை. வாழ்நாள் முழுக்க ஒருவரின் மனதை அமைதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அதற்குப் பலன் கிடைக்கும்.

தியானத்தின் மூலம் தனது அழுக்கை, குரூரத்தை, எரிச்சலை, அதிருப்தியை, கவலையை, விரக்தியை மாற்றிக்கொண்டால்தான் அது வாழ்வை வளப்படுத்தும். தனிமையைத் தவிர்த்தல் கூடிய மட்டும் தனிமையைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்குப் பிடித்தமானவரிடம் மனம்விட்டுப் பேசுங்கள்.

இசை, புத்தகம் நல்ல புத்தகங்களைப் படிப்பது மனஅழுத்தத்தைத் தவிர்க்கும். மனதிற்குப் பிடித்த இசையைத் தொடர்ந்து கேட்பது மிக நல்லது. மனம் வேறு சிந்தனைக்குப் போகாமல் கட்டுப்படுத்தும் திறன் இசைக்கு உண்டு. உணவு அசைவப் பிரியர்கள் மீன் சாப்பிடலாம். அதில் உள்ள ஒமேகா 3 மனதை நல்ல மூடுக்குக் கொண்டு வரும். 

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல்தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை.

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும். - இது கண்ணதாசன் காட்டும் சரியான மருந்து.