மரணத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு கூட நண்பர்களுக்கு விருந்து! ஜேகே ரித்தீஷின் கடைசி நிமிடங்கள்!

மரணமடைவதற்கு கடைசி அரை மணி நேரத்திற்கு முன்பு கூட தனது நண்பர்களுக்கு விருந்து வைத்துள்ளார் ஜேகே ரித்தீஷ்.


நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக இராமநாதபுரம் சென்று இருந்தார் ஜேகே ரித்தீஷ். முதல் இரண்டு நாட்கள் ராமநாதபுரத்தில் பம்பரமாக சுழன்று பாஜக வேட்பாளராக களப்பணி ஆற்றினார் ஜேகே ரித்தீஷ்.

இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சரும் எனது நண்பருமான விஜயபாஸ்கர் ராமநாதபுரம் வந்திருப்பதை அறிந்து அவரை தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று விஜய பாஸ்கரும் தனது நண்பர்களுடன் ஜேகே ரித்தீஷ் வீட்டிற்குச் சென்றிருந்தார். தன்னைக் காண வந்த தனது நண்பர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு தடல்புடல் விருந்து வைத்து அசத்தினார்.

விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் விருந்து சாப்பிட்டு விட்டு சென்ற பிறகுதான் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஜேகே ரித்தீஷ் காலமாகியுள்ளார். விருந்து சாப்பிட்டு விட்டு சென்ற அடுத்த சில நிமிடங்களில் ரித்தீஷ் காலமாகி விட்டார் என்கிற தகவல் விஜயபாஸ்கருக்கு சொல்லப்பட்டுள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஜேகே ரித்தீஷ் வீட்டிற்கு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றார். ‌