ஜியோ டிஜிட்டல்! ஒட்டு மொத்த இந்தியாவையும் வேட்டை ஆடப்போகும் அம்பானி!

ஒட்டுமொத்த இந்தியாவையும் வேட்டை ஆடுவதற்கான ஒரு வேலை திட்டத்தை தீட்டி முடித்து இருக்கிறார் முகேஷ் அம்பானி.


வீட்டில் இனி டிவி, இண்டர்நெட், போன் எதுவும் தனியாக இருக்க வேண்டியது இல்லை. எல்லாம் ஒரே ரீசார்ஜில், ஒரே எண்ணில், கணக்கு வைத்துக் கொள்ளப்படும். மொத்தமாக ஆண், பெண், குழந்தைகள் அத்தனைப் பேரையும் ஒரேவொரு ஆளுமையாக இருந்து வழிநடத்தப்போகிறார் முகேஷ் அம்பானி. 

நீங்கள் எதைப் பார்க்க வேண்டும். எதைப் பார்க்க கூடாது. எதை வாங்க வேண்டும். எதை வாங்க கூடாது. யாருக்கு வாக்களிக்க வேண்டும். யாருக்கு வாக்களிக்க கூடாது என்று அனைத்தையும் உங்களுக்காக ஒற்றை ஆளாக இருந்து தீர்மானிக்கப் போகிறார் அம்பானி. இந்தியாவின் நிழல் அதிபராக இதுவரையும் அவர்தான் இருந்தார். இனியும் அவர்தான் இருப்பார். 

இது டிஜிட்டல் உலகம். இதுதான் அனைத்தையும் ஆளும். உங்களையும், என்னையும், நம் அரசையும் டிஜிட்டல்தான் தீர்மானிக்கும். அதனை முகேஷ் அம்பானி எளிதாக புரிந்து கொண்டார். அதனால்தான், இதுவரை அவரது பெரும்பான்மையான வருமானமாக இருந்த எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி சார்ந்த துறையில் இருந்து மெல்ல வெளியேறுகிறார். 

ஓர் அரபு தேச நிறுவனத்திடம் தன் எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்கிறார். அதன் மூலம் தனது முந்தையக் கடன்களை அடைக்கிறார். புதிய வங்கி கடன்களுக்கு திட்டம் தீட்டுகிறார். அதற்கு அவர் வைத்த பெயர்தான் 'ஜீயோ'. 

முதலில், அலைபேசி-நெட்வொர் துறையில் மட்டும் நுழைந்த ஜீயோ, அடுத்து உங்கள் வீட்டு வரவேற்பு அறைக்குள்ளும் நுழைகிறது. அலைபேசி பயன்படுத்துவோரை மட்டும் குறிவைத்தால் போதாது, வீட்டில் சீரியல் பார்க்கும் பெண்களையும் குறிவைத்து தாக்கினால்தான், நாட்டை யார் ஆள்வது என்பதை தீர்மானிக்க முடியும். 

ஏர்செல், வோடபோன், ஏர்டெல் போன்ற பல நிறுவனங்களை 'இலவசம்' வார்த்தையைப் பயன்படுத்தி அழித்து முடித்தது ஜீயோ. அடுத்த தாக்குதலாக 'டிவி-இண்டர்நெட்'. காலையில் நீங்கள் கண் விழிப்பதில் தொடங்கி, இரவு தூங்கப் போகும் இறுதி நிமிடம்வரை, இனி ஜீயோதான் உங்களைப் பின்தொடரும். அதற்காக இனி தொலைக்காட்சி, இண்டெர்நெட் எல்லாமும் அடுத்த ஓரிரு ஆண்டுகள் இலவசமாக கிடைக்கும்.

மற்ற எல்லா நிறுவனங்களையும் முழுங்கியப்பின், ஜீயோ டிஜிட்டல் யுத்தம் தொடங்கும். அணு ஆயுத யுத்தம் முடிந்து, உயிரி யுத்தம் தொடங்குவதாக சொன்னார்கள். அது தொடங்கியதா என்று மக்கள் உணர்வதற்குள் டிஜிட்டல் யுத்தத்தை தொடங்கிவிட்டனர். 

டிஜிட்டல் யுத்தம், மற்ற யுத்தங்களில் இருந்து மாறுபட்டது. மற்ற எல்லா யுத்தங்களும் மனிதனின் உடலை தாக்கின. இந்த யுத்தம் மனிதனின் உளவியலைத் தாக்கும். உங்களின் உளவியலை பிறர் தீர்மானிக்க முடியுமா? ஆம்.. கட்டாயம் முடியும். உங்களுக்கே தெரியாமல், உங்களின் ஆழ்மனதிற்குள் புகுந்து, உங்களுக்குத் தேவையே இல்லாதப் பொருளைகூட புகுத்த முடியும். 

'அட.. பக்கத்து வீட்டில் வாங்கிட்டாங்க.. எதிர் வீட்டில் வாங்கிட்டாங்க.. 'டேபிள் மேட்'டை நீங்கள் வாங்கலயா...?' என்று விளம்பரம் செய்தே விற்றார்களே, அப்படி இனி உங்களின் ஜீயோ அலைபேசியிலும், ஜீயோ இண்டெர்நெட்டிலும், ஜீயோ டிவியிலும் நீங்கள் விரும்பாத ஒரு தருதலையைக் கூட, தலைவனாக நம்பும்படி செய்து முடிப்பார் அம்பானி. 

இதுவரை மக்கள் ஓட்டு போட்டு அனுப்பி வைத்தவர்களை வைத்து, தனக்கு சாதகமாக சட்டங்களை இயற்றி வந்ததுதான், அம்பானி குடும்ப பாணி. இனி, ஓட்டையே மக்கள் யாருக்கு போட வேண்டும் என்பதையும் அவர்களே தீர்மானிப்பர். இந்தியாவின் நிழல் அரசாங்கம் இனி அம்பானியின் வீட்டில் இருந்துதான் நடத்தப்படும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்..

அடுத்த ஓரிரு ஆண்டுகளில் நான் மேலே சொன்ன அனைத்தும் நடக்கும்.. இந்தியாவை ஜீயோ டிஜிட்டல் பேய் பிடித்து ஆட்டும்.. இதை தடுக்கவே முடியாதா? 'முடியாது' ஏன்? மக்கள் பாவம்.. இலவசமாக எது குடுத்தாலும் வாங்கிக் கொள்ளும் பாவப்பட்ட ஜென்மங்கள் ஆச்சே...

கை ஏந்தும் எவன் ஒருவனும் அடிமையாக வாழ்வதை தவிர வேறு வழி... அம்பானி கொடுக்கும் இலவசம்.. நாட்டையே அவனுக்கு அடிமைபடுத்தி முடிக்கும்.. இதெல்லாம் மக்களுக்கு புரியும் என்று நம்புகிறீர்களா? 

-பேராசிரியர் ஆ.அருளினியன்