திருமணமான 3வது நாள்..! கணவன் பரிசளித்த நகைகளை கழட்டி கண்ணீருடன் போலீசிடம் ஒப்படைத்த புதுப்பெண்! அதிர்ச்சி காரணம்!

பணம், நகைகளை கொள்ளையடித்து காதல் திருமணம் செய்த நபர் திருமணம் ஆன 3வது நாளே சிறைக்கு செல்லவேண்டிய சோக சம்பவம் ஏற்பட்டுள்ளது.


சென்னையை சேர்ந்த ஆரோக்ய ஜான்போஸ்கோ என்பவர் காதலித்த பெண்ணையே மணக்க வேண்டும் என்பதற்காக பெண் வீட்டாருக்கு வரதட்சனை கொடுப்பது போல் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை அள்ளிக் கொடுத்துள்ளார். மாப்பிள்ளை நல்ல வேலையில் நன்றாக சம்பாதிப்பதாக நினைத்த பெண் வீட்டார் பெண்ணின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து ஆரோக்ய ஜான்போஸ்கோவுக்கு திருமணம் செய்து வைத்தனர். கடந்த ஓராண்டாக அந்தப் பெண்ணை காதலித்த ஜான்போஸ்கோ திருடிய பணம், நகைகளைக் கொண்டு திருமணம் செய்துள்ளார். காதல் மனைவிக்கும், அவருடைய வீட்டாருக்கும் விதவிதமாக நகை, வீட்டிற்குத் தேவையான பொருட்கள் என அள்ளிக் கொடுத்துள்ளார். 

இந்நிலையில் திருமணம் ஆன 3வது நாள் ஆரோக்ய ஜான்போஸ்கோவின் மாமியார் வீட்டின் கதவை காவல்துறை தட்டியது. போலீசாரை கண்டதும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் என்ன ஏது என்று விசாரிக்க தமிழகத்தில் பல இடங்களில் பணம், நகைகளை ஜான்போஸ்கோ கொள்ளையடித்துள்ளதாக தெரிவித்தனர். இதனால் புதுமணப்பெண்ணும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். முதலில் தான் கொள்ளையடிக்கவில்லை என ஜான்போஸ்கோ மறுத்தலாம் வேறு வழியின்றி பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார்.

சென்னை பம்மலை சேர்ந்த முத்துப்பாண்டி வீட்டில் 50 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை போன வழக்கும், திருச்சி, பல்லடம், இளையாங்குடி, புதுக்கோட்டை, திருமங்கலம் காவல் நிலையங்களிலும் ஜான்போஸ்கோ மீது கொள்ளையடித்த 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கணவர் கொடுத்த நகைகள் திருட்டு நகைகள் என தெரியவந்ததால் அதை கண்ணீருடன் கழற்றிக் கொடுத்தார் அந்தப் பெண். தாலியும் நகையில்தானே இருக்கும். கழட்டிக் கொடுத்தாரா என கேட்காதீர்கள். சட்டம் தன் கடமையை செய்யும்.