வெள்ளை சர்க்கரையில் கலப்படமென்றால் நாட்டுச் சர்க்கரையிலும் கொடூரமான கலப்படம்.! மக்களே உஷாரா இருங்க.

பெரிய சர்க்கரை ஆலைகளில் ரசாயனம் உபயோகித்து வெள்ளை சர்க்கரையாக தயாரிக்கப்படுகின்ற அஸ்கா சர்க்கரையை பயன்படுத்தி வந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டு சர்க்கரைக்கோ, வெல்லத்திற்கோ மாறி வருகிறார்கள்.


அஸ்கா தயாரிக்கின்ற ஆலைகளில் சர்க்கரையை வெள்ளை நிறமாக்குவதற்கு பயன்படுத்துகின்ற ரசாயனம் உடம்புக்கு கெடுதல் என்று சுகாதாரம் கருதி வாங்குவதை மக்கள் தவிர்த்து வருகிறார்கள் என்று கொங்கு கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரன் எச்சரிக்கை செய்துள்ளார்.

நாட்டு சக்கரை, வெல்லம் போன்ற பொருட்களின் விலை அதிகமாக இருந்தாலும் குடும்ப நலன் கருதி வாங்குகிறார்கள். ஒரு கிலோ 45 ரூபாய்க்கு அஸ்கா சர்க்கரை விற்கப்படுகின்ற நிலையில் நாட்டு சர்க்கரை உடல் நலனுக்கு நல்லது என்று சொல்லி ஒரு கிலோ 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

ஆனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான நாட்டு சர்க்கரை தயாரிப்பாளர்கள் விவசாயிகளிடம் கரும்பை வாங்கி கரும்புச்சாறில் இருந்து தயாரிக்காமல், பெரிய ஆலைகளில் அஸ்கா சர்க்கரையை வாங்கி கலப்படம் செய்கிறார்கள். இது தெரியாமல் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து நாட்டு சர்க்கரையை கடைகளில் வாங்குகிறார்கள். 

கரும்பு விவசாயிகள் தங்களிடம் தேவையான கரும்பை வாங்காமல் நாட்டு சர்க்கரை தயாரிக்கப்படுகிறது என்று பலமுறை புகார் கொடுத்தும் அரசு தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லை. நாட்டு சர்க்கரை தொழிலை நம்பி இருக்கின்ற கரும்பு விவசாயிகள் விளைவித்த கரும்பை விற்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

அஸ்கா சர்க்கரையை நிறம் மாற்றி நாட்டு சர்க்கரை என்று சொல்லி மூன்று மடங்கு விலைக்கு விற்கப்படுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது என்பது வேதனை. நாமக்கல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் AKP.சின்ராஜ் அவர்கள் நாட்டு சர்க்கரை ஆலைகளில் அதிகாரிகள் துணையோடு நடக்கின்ற முறைகேடுகளை கண்டுபிடித்து சரி செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.

நாமக்கல் மாவட்ட நாட்டு சர்க்கரை ஆலை அதிபர்களுடைய பிரச்சினை என்னவென்றால் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற ஆலைகள் அனைத்திலும் ஆய்வு செய்து தவறுகளை சரி செய்தால் தான் சந்தையில் எல்லோரும் ஒரே விலைக்கு விற்க முடியும் என்பது.

நாமக்கல்லில் மட்டும் சுத்தமான நாட்டு சர்க்கரை தயாரிக்கப் பட்டால் கலப்படம் செய்கின்ற மற்ற ஆலைகளோடு விற்பனை போட்டியில் தோற்றுப்போவோம் என்பதுதான் அவர்களுடைய ஆதங்கம். இதை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் செய்ய முடியாது. தமிழக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்காமல் தமிழகம் முழுவதும் கலப்படம் செய்வதை தடுப்போம் என்று முடிவெடுத்தால் மட்டுமே பிரச்சினை தீரும்.

தொடர்ந்து பொதுமக்கள் அவர்களை அறியாமலேயே ஏமாற்றப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. அந்த ஏமாற்று வேலைகளுக்கு அரசும் துணை போகவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.