வேலூர் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம் என்பதால்தான் தினகரன், கமல்ஹாசன் போன்றவர்கள் நைசாக ஓடிப்போய் ஒளிந்துகொண்டார்கள். ஆனால், கொஞ்சமும் அச்சம் இல்லாமல் போட்டியிட்டவர் நாம் தமிழர் சீமான் மட்டும்தான்.
மிஸ்டர் சீமான், இந்த ஓட்டு போதுமா? இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கப் போறீங்க?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 5 சதவிகிதம் வாக்குகள் பெற்றதால், கொஞ்சம் நம்பிக்கையுடன் காணப்பட்டார். அதனால் தைரியமாக இந்தத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினார். இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகள் மட்டுமே பெற்று இருக்கிறார். இது கிட்டத்தட்ட 2.5% மட்டும்தான்.
மக்கள் நீதி மய்யம், அமமுக போன்ற கட்சிகள் களத்தில் இல்லாத நிலையில்கூட நாம் தமிழர் கட்சியால் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வாக்குகளை பெற முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் பொதுத் தேர்தலைவிட குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன.
வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் களத்தில் தொடர்ந்து இருக்கிறோம் என்பது மட்டுமே சீமான் கட்சிக்கு போதுமா? தொடர்ந்து தோல்விகள் மட்டுமே அடையாளமாக இருக்க வேண்டுமா? நாம் தமிழர் கட்சி என்றாலே, தோற்றுத்தான் போவார்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுவிடாதா? இது நகைச்சுவையாக மாறிவிடும் என்பது சீமானுக்கு ஏன் புரியவில்லை?
பேச்சாளராக, போராளியாக தமிழ் மக்கள் சீமானை பார்க்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் ஒருபோதும் சீமானை ஆளும் சக்தி தலைவராகப் பார்க்கவில்லை. அப்படி ஒரு பிம்பத்தை சீமான் மக்களிடம் ஏற்படுத்தவும் இல்லை. இவரைப் போன்றுதான் வைகோவின் பேச்சை மக்கள் ரசித்தார்கள், ஆனால் தலைவராக ஏற்கவில்லை.
அதனால் வைகோவைப் போன்று சீமானும் ஏமாந்துவிடக் கூடாது. இன்று அவரை நம்பி கையில் இருக்கும் பணத்தைப் போட்டு தேர்தலில் நின்று தோல்வியைத் தழுவுகிறார்கள். அவர்கள் சொந்த விருப்பத்தில் வருகிறார்கள் என்றாலும், அவர்கள் நஷ்டத்துக்கு பொறுப்பு ஏற்பது யார்? யாருக்காக இந்தப் போராட்டம்?
சீமான் தன்னுடைய அரசியல் பாதையை மாற்றவில்லை என்றால் காணாமல் போய்விடுவார். அப்படி அவர் காணாமல் போகக்கூடாது என்பதற்காகவே இதனை எழுதுகிறோம். தலைவனாக மாறுங்கள் சீமான்.