இப்போது தமிழகம் இரண்டாவது நிலையில் இருந்தாலும், 3வது நிலைக்குப் போய்விடலாம் என்று அச்சம் தெரிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தமிழக கொரோனா தாக்கம் 3ம் நிலைக்குப் போகிறதா..? அச்சப்படும் எடப்பாடியார் ஒடிசாவை பின்பற்றுவாரா..?

அவர், இனியாவது ஒடிசா மாடலை முன்வைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்கள், மருத்துவப் பெருமக்கள். 2019 டிசம்பரிலேயே `கொரோனா வைரஸ், உலகை துவம்சம் செய்யப் போகிறது’ என்று சில மருத்துவர்கள் கணித்துவிட்டார்கள். பிப்ரவரி இறுதியில் இந்தியாவுக்குள் அந்த வைரஸின் தாக்கம் உணரப்பட்டு விட்டது.
பெரும்பாலும் எல்லா மாநிலங்களுமே பதற்றத்துடன் என்ன செய்வது எனக் குழம்பிக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு பேரிடரை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை, பிற மாநிலங்கள் அறியும் வகையில் செயல்பட்டது ஒடிசா.
மார்ச் 13ஆம் தேதி...கொரோனா பரவலைத் தடுப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சரவையைக் கூட்டி பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.
அதே நாளில் ஒடிசா சட்டமன்றத்தில் முதல்வர் நவீன் பட்நாயக்கும் பிற சட்டமன்ற உறுப்பினர்களும் கைகளை கிருமிநாசினியால் கழுவி, தங்கள் மாநில மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வைத் தொடங்கி வைத்துவிட்டார்கள். அன்றைய தினமே பேரிடர் சட்டமும் நடைமுறைக்கு வந்துவிட்டது.
செயல்திட்டங்கள் அடுத்தடுத்து வகுக்கப்பட்டன. யாருக்காகவும் யாரும் காத்திருக்கவில்லை. அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்பட்டார்கள். கொரோனாவைவிட ஆபத்தானது மற்றும் வேகமாகப் பரவக்கூடியது வதந்தி. எங்கே செய்திகள் முடக்கப்படுகின்றனவோ அங்கே வதந்திகள் பிறக்கும்.
வதந்திகளைத் தடுத்து கொரோனா குறித்த தகவல்களை வெளிப்படையாக வழங்கவும் ஒருங்கிணைக்கவும் ஒடிசா திறன் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரும் எழுத்தாளருமான ‘மைண்ட் ட்ரீ ’ சுப்ரதோ பாக்ஷி, அரசு தலைமைச் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். கொரோனா குறித்து எல்லா துறைகளிடமிருந்தும் தகவல்களைப் பெற்று தினமும் மாலை 4.30 மணிக்கு ஊடகங்களிடம் இவர் பேசுவார்.
இதன்மூலம் மக்கள் அன்றாடம் உறுதிசெய்யப்பட்ட தகவல்களை அறிந்துகொள்கிறார்கள். வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மூலமே கொரோனா உள்ளே நுழைகிறது. அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதுதான் பெரும் சவால். பல நாடுகளும் கோட்டைவிட்டது அங்குதான்.
அதற்கோர் அருமையான திட்டம் தீட்டியது ஒடிசா அரசு. ஒரு ஆப் மற்றும் இணையதளம் தொடங்கப்பட்டன. `வெளிநாடு களிலிருந்து ஒடிசாவுக்குள் நுழைபவர்கள், 24 மணி நேரத்துக்குள் இந்த ஆப் அல்லது இணையதளத்தில் தங்களைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்துகொண்டு, 14 நாள்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதற்குப் பரிசாக 15-வது நாள், 15,000 ரூபாய் அவர்களுக்கு ஊக்கத்தொகையாகத் தரப்படும்’ என அறிவிக்கப்பட்டது. அவர்களைக் கண்காணிக்கவும் கவுன்சலிங் தரவும் 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்கள் உருவாக்கப்பட்டன. அந்தத் திட்டத்தை அறிவித்ததுடன் கையாட்டிவிட்டுச் சென்றுவிடவில்லை முதல்வர் நவீன் பட்நாயக்.
‘என் சகோதரி அமெரிக்காவி லிருந்து ஒடிசா திரும்பியிருக்கிறார்’ என ‘ஆப்’பில் பதிவுசெய்தார். பூரி சமஸ்தானத்தின் ராஜா, ‘நான் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்திருக்கிறேன்’ எனப் பதிவுசெய்தார். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, ‘இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் லண்டன் சென்று வந்தேன்’ எனப் பதிவுசெய்தார்.
முதல்வரும் அதிகாரிகளுமே பதற்றத்துடன் பதிவுசெய்கிறார்கள் என்றால், மக்கள் சும்மா இருப்பார்களா? பிப்ரவரி முதல் வெளிநாடு சென்று வந்த ஐந்தாயிரம் பேர் தங்களைப் பதிவுசெய்து தனிமைப்படுத்திக்கொண்டார்கள். வெளிநாடு சென்று திரும்பிய அந்த ஐந்தாயிரம் பேரில் 70 சதவிகிதம் பேர் குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்கள், எட்டு நகரங்களைச் சேர்ந்தவர்கள்.
மார்ச் 21-ம் தேதி, பிரதமர் ஒரு நாள் ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்பாகவே அந்த ஐந்து மாவட்டங்களையும் எட்டு நகரங்களையும் முழுமையாக முடக்கியது ஒடிசா அரசு. பிறகு மக்களை பதற்றத்தில் ஆழ்த்தாமல், பேருந்து நிலையங்களில் மக்களை கும்பலாகத் தவிக்க விடாமல் படிப்படியாக மூன்று கட்டங்களாக ஊரடங்கை அமல்படுத்தியது.
95 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, குடும்பத்தில் ஒரு நபருக்கு ஐந்து கிலோ வீதம், நான்கு மாதங்களுக்குத் தேவையான அரிசி வழங்கப்பட்டது. ஐம்பது லட்சம் பேருக்கு நான்கு மாதங்களுக்கான முதியோர் உதவித்தொகை வீடு தேடிச் சென்றது. எண்பதாயிரம் நடைபாதை வியாபாரிகளுக்கு தலா 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப் பட்டது. இதுபோல் செயல்பட்டால், தமிழகமும் 3வது நிலைக்குப் போய்விடாமல் காப்பாற்ற முடியும்.