இலவச வேட்டி, சேலையில் ஊழல் செய்தாரா செல்லூர் ராஜு? எடப்பாடி அரசுக்கு மீண்டும் ஒரு பெருமை!

டெல்லியில் சிறந்த நிர்வாகி என்று பட்டம் வாங்கிவரும் எடப்பாடிக்கு, அவரது அமைச்சர்களால் தினமும் அடாவடியும் பிரச்னையும்தான்.


ஆம், இப்போது இலவச வேட்டி, சேலை விஷயத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்கள். பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை கொடுப்பது வழக்கம். அந்த வகையில் 1 கோடியே 25 லட்சம் இலவச வேட்டி-சேலை உற்பத்தி செய்வதற்கான நூல்களை, தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை கொள்முதல் செய்து, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கியுள்ளது. 

இதில் ஒரு சேலைக்கு, 260 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், தரம் குறைந்த நூல்களை அதிக விலைக்குக் கொள்முதல் செய்ததன் மூலம், 21 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளதாகக் கூறி, திருப்பூரைச் சேர்ந்த முத்தூர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தரம் குறைந்த நூல்களை நெய்வதற்கு வழங்கியதால் ஒரு நாளைக்கு 3 சேலைகளை மட்டுமே நெய்ய முடிகிறது எனவும் தினமும் 6 சேலைகள் நெய்யும் எங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

தரம் குறைந்த நூல்களை, அதிக விலைக்குக் கொள்முதல் செய்ததன் மூலம், அரசுக்கு 21 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. அமைச்சர் செல்லூர் ராஜூ இப்படியுமா செய்வார் என்று மக்க்ள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.