இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகை ரேவதி, நடிகையும் இயக்குநருமான அபர்ணா சென் போன்ற கலையுலக பிரபலங்கள் 49 பேர்.
மோடியை மணிரத்னம் எதிர்க்கிறாரா இல்லையா? வெளிப்படையாக சொல்ல பயமா? பரபர ரிப்போர்ட்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு விமர்சனக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அந்தக் கடிதத்தில், அன்புள்ள பிரதமரே.... அமைதியை நேசிக்கிற -இந்தியர்கள் என்ற பெருமிதம் கொண்ட நாங்கள், அண்மைக்காலமாக நமது பெருமை வாய்ந்த நாட்டில் நடைபெறும் பல துன்பியல் நிகழ்வுகளை ஆழ்ந்த கவலையோடு பார்த்துவருகிறோம்.
நமது இந்தியா ஒரு மதச்சார்பற்ற சோஷலிச ஜனநாயகக் குடியரசென்று நமது அரசியலமைப்புச்சட்டம் விவரிக்கிறது. இங்கு வாழும் அனைத்து மத, இன, சாதி சார்ந்த குடிமக்கள் அனைவரும் சமமானவர்களென்றும் அது குறிக்கிறது. எனவே, அரசியலமைப்புச்சட்டம் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கும் உரிமைகளை அவர்கள் அனுபவிப்பதை உறுதிசெய்ய வேண்டி, இந்த வேண்டுகோளை சமர்ப்பிக்கிறோம்.
முஸ்லிம்களும் - தலித்துகளும் - இன்னபிற சிறுபான்மை மக்களும் தாக்குதலுக்குள்ளாவதும் - படுகொலை செய்யப்படுவதும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். தேசிய குற்ற ஆவணப் பிரிவின் அறிக்கையிலிருந்து - 2016ம் ஆண்டில் மட்டும் 840க்கும் குறையாத வன்கொடுமைகள் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள்மீது நிகழ்த்தப்பட்டுள்ளனவென்றும், ஆனால் குற்றவாளிகளுக்கு வழங்கப்படுகிற தண்டனை விகிதம் குறைந்திருக்கிறதென்றும் அறிந்து பெரும் அதிர்ச்சிக்காளாகியிருக்கிறோம்.
மேலும், 2018 அக்டோபர் 28 - 2019 ஜனவரி 1 ஆகிய தேதிகளுக்கிடையே, 254 மத வெறுப்பின் அடிப்படையிலான குற்றங்கள் நடந்தேறியிருக்கின்றன. அவற்றில் - குறைந்தது 91 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் - 579 பேர் தாக்குதலுக்கு ஆளாகிப் படுகாயமடைந்திருக்கிறார்கள் இந்திய மக்கள் தொகையில் 14 சதவீதம் இருக்கக்கூடிய முஸ்லிம்கள் 62 சதவீத சம்பவங்களிலும், 2 சதவீத மக்கள்தொகையுள்ள கிறிஸ்தவர்கள் 14 சதவீத சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வன்முறைச் சம்பவங்களில் 90 சதவீதம், 2014 மே மாதத்துக்குப் பிறகு - உங்கள் அரசாங்கத்தின் அதிகாரம் நிலவிய காலங்களிலேயே நிகழ்ந்துள்ளன.
இந்த வன்முறைச்சம்பவங்களைக் நாடாளுமன்றத்திலேயே நீங்களே குறிப்பிட்டிருக்கிறீர்கள் பிரதமர் அவர்களே, ஆனால் அது போதாது. குற்றவாளிகளுக்கெதிராக உண்மையில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? இந்தக் குற்றங்கள் பிணையில் வெளிவரமுடியாக் குற்றங்களாக அறிவிக்கப்படவேண்டும் என்றும், அதற்கான உரிய தண்டனைகள் விரைவாகவும், உறுதியாகவும் நிறைவேற்றப்படவேண்டுமெனவும் உறுதியுடன் கருதுகிறோம் . பரோலில் வரமுடியாத ஆயுள்தண்டனை ஒரு கொலைக்கான தண்டனையாக வழங்கப்படும்போது, இந்தப் படுகொலைகளுக்கும் வழங்கினாலென்ன? அவை மட்டும் குற்றத்தில் இவற்றை விடக் கொடியவையா என்ன? ஒரு குடிமகன்கூட தனது சொந்தநாட்டிலேயே அச்சத்துடன் வாழக்கூடாது.
வருத்தம் என்னவென்றால், 'ஜெய் ஸ்ரீராம் ' என்கிற முழக்கம்கூட ஆத்திரமூட்டும் 'யுத்த ஓலமாக' இன்றைக்கு மாறியிருக்கிறது! இது சட்ட ஒழுங்குப் பிரச்சனைகளுக்கு இட்டுச்செல்கிறது! பல கொலைவெறியாட்டங்கள் இந்த முழக்கத்தின்பேரில் அரங்கேறுகின்றன! முந்தைய மத்தியக் காலங்களில்கூட இவ்வாறு நடந்ததில்லை. பல வன்முறைகள் மதத்தின் பெயரைச் சொல்லி நடந்தேறியிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. இந்தியாவின் பெரும்பான்மைப் பிரிவு மக்களிடையே ராமனின் பெயர் புனிதமான ஒன்றாகப் போற்றப்படுகிறது. நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கிற நீங்கள், ராமனின் பெயர் இப்படி இழிவான செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதை நிறுத்தவேண்டும்.
மாற்றுக் கருத்து இல்லாமல் ஜனநாயகம் இல்லை. அரசாங்கத்துக்கெதிராக கருத்துச் சொல்லுகிறவர்களையெல்லாம் 'தேசவிரோதிகள்' என்றும், 'நகர்ப்புற நக்ஸல்கள்' என்றும் முத்திரைகள் குத்துவதும், அவர்களைச் சிறையிலே தள்ளுவதும் ஒருபோதும் கூடவே கூடாது. பேச்சுரிமையையும், கருத்துரிமையையும் பாதுகாப்பதாக அரசியல் சட்டத்தின் பிரிவு 19 ஒருங்கிணைத்து உறுதியளிப்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.
ஆளுங்கட்சியை விமர்சனம் செய்வதென்பது, தேசத்தை விமரிசிப்பதாக அர்த்தமில்லை. அதிகாரத்திலிருக்கும்போது, நாட்டின் ஒட்டுமொத்தக் கருத்துக்கு ஒத்ததாக ஒரு ஆளும்கட்சியும் இருக்க இயலாது. நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளுள் ஒன்றாகத்தான் அதுவும் இருக்கமுடியும். எனவே அரசாங்கத்துக்கு எதிரான கருத்துகளை தேசத்துக்கு எதிரான உணர்வுள்ள கருத்துகளோடு ஒப்பிடுவது கூடாது.
எங்கே மாற்றுக்கருத்துகள் நசுக்கியொடுக்கப்படாத சூழல் நிலவுகிறதோ, அங்கேதான் வலிமையான ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பமுடியும். எங்கள் கருத்துகள் தேசத்தின்பால் உண்மையான நேயம் கொண்ட - அதன் தலைவிதிமீது அக்கறைகொண்ட இந்தியர்களின் கருத்துகள் என்கிற உண்மையான அர்த்தத்துடன் ஏற்றுக்கொள்ளப்படுமென்று நம்புகிறோம் என்று கையெழுத்திட்டிருக்கிறார்கள். இந்தக் கடிதத்தில் மணிரத்னம் கையெழுத்து போட்டிருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் பெரிதாக ஓடுகிறது. இதுகுறித்து சுஹாசினி குழப்பமாக பதில் சொல்கிறார், மணிரத்னம் பதில் சொல்வதே இல்லை.
செய்ததை உண்மை என்று சொல்வதில் என்னதான் பிரச்னையோ..?