போலீஸுக்கு அடியாட்களா ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்..? மனித உரிமைகள் அமைப்பு நோட்டீஸ்

சாத்தான்குளம் சம்பவத்தில் இரட்டை மரணத்துக்கு பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினரும் குற்றம் சாட்டியதை அடுத்து, தமிழகமெங்கும் அந்த அமைப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வருகின்றன.


 இதையடுத்து தமிழக காவல்துறையினால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பா..? என்பது குறித்து பதிலளிக்க தமிழக டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், சம்பந்தப்பட்ட காவலர்களான ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் தன்னார்வலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

இந்த நிலையில், பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் தமிழக காவல்துறையினால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பா..? எனக் கேட்டு தமிழக டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், காவல்துறை பணிகளுக்கு பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை பயன்படுத்த சட்ட அனுமதி உள்ளதா..? என்றும், காவல்துறை பணிகளை பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மேற்கொள்வது மனித உரிமை மீறல் அல்லவா..? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காவல் துறை மக்களின் நண்பன் என்று எழுதி வைத்திருப்பதோடு சரி, அவர்கள் ஒருபோதும் மக்களின் நண்பனாக பணியாற்றியதில்லை. இந்த நிலையில், அவர்களுக்கு கீழ் அடியாளாக வேலை செய்வதற்கு ஒரு அமைப்பா? அதனை உடனடியாக களைய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் குரல் எழுந்துள்ளன.

அதுசரி, தள்ளு வண்டிகளில் பழம் விற்பவா்களிடம் கூட காசு கொடுக்காமல் ஓசியில் பழத்தைத் தூக்கிக் கொண்டு செல்வதையும், உணவு விடுதிகளில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் அதிகார போதையுடன் நடந்து செல்வதை கண் முன்னே பார்க்கத்தான் செய்கிறோம். அவர்கள் எப்படி மக்களின் நண்பராக இருக்க முடியும்.? இவர்களை திருத்துவதற்கு ஒரு சட்டம் போட வேண்டும்.