ஒடுக்கப்பட்டவர்களுக்கு படிப்பு மட்டும் போதுமா? அசுரன் வெற்றிமாறன் வசனத்துக்கு எதிர்ப்பாட்டு!

படித்தால் மட்டும்தான் ஜாதிக் கொடுமையை, அடக்குமுறையை ஒடுக்கமுடியும் என்பது அசுரன் படத்தில் வெற்றிமாறனின் வசனம். படிப்பும் ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதம் அல்ல என்கிறது இந்தப் பதிவு.


தனுஷ் என்னும் நல்ல விலைபோகக்கூடிய கதாநாயகனை வைத்துக்கொண்டு வணிகரீதியான வெற்றிப்படம் எடுக்கும் சூத்திரம் வெற்றிமாறன் அறியாததல்ல. ஆனால் மீண்டும் ஒரு நாவலை அவர் திரைப்படமாக்கியிருப்பது பாரட்டத்தக்கது.. அதேபோல் இப்படியொரு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்..

படம் சொல்லியிருக்கும் செய்தி, களத்தேர்வு, நடிப்புத்திறன், இசை எல்லாவற்றையும் தமிழ்ச் சமூகம் பாராட்டிக் கொண்டிருக்கிறது.. அதனை நானும் வழிமொழிகிறேன். ஆனால் இதுபோன்று படமெடுத்த வெற்றிமாறனின் நோக்கம் வெறும் பாராட்டுப் பெறுவதாக மட்டும் இருக்க முடியாது.. இது ஒரு பெரும் உரையாடலைத் தொடங்க வேண்டும்..

துரதிருஷ்டவசமாக வழக்கம்போல் இதிலும் சாதியப் பிளவுகளை முன்வைத்து வெற்றிமாறனையும், ரஞ்சித்தையும் மோதவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.. இது தவறானதும், தட்டையானதுமாகும்.

”பணம், காசு, சொத்து, நிலம் எல்லாத்தையும் புடுங்கிக்குவாங்க.. படிப்பை மட்டுந்தான் அவங்களால பறிக்க முடியாது.. படி..” இதுதான் சிவசாமி தன் மகன் சிதம்பரத்துக்கும் சொல்லும் செய்தி. படத்தின் மூலம் வெற்றிமாறன் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்குச் சொல்லும் செய்தியும் இதுதான்.

இதே போல், புள்ள குட்டிகளைப் படிக்க வைங்க என்றுதான் தேவர் மகன் சொன்னது, எனில் படிப்பு மட்டுமே ஏற்றத்தைக் கொடுத்துவிடுமா என்றால், இல்லை என்பதே நேர்மையான பதிலாகவும், கொடூரமான எதார்த்தமாகவும் இருக்கிறது..

ஒடுக்குபவர்கள் அந்தந்தத் தெருவிலோ, ஊருக்குள்ளோ மட்டுமில்லை.. அவர்கள் மிக உயர்ந்த ஆட்சி அதிகாரங்களில் இருக்கிறார்கள். அந்த அதிகாரம்தான் கார்ப்பரேட்டுகளுக்காக சேரியையும், குடியானவத் தெருக்களையும் சேர்த்தே ஒடுக்குகிறது..

எல்லா சாதிகளிலும் ஒரு கணிசமான எண்ணிக்கையில் படித்து முன்னேறி பதவிகளிலும், வியாபாரத்திலும் செழித்து பொருளாதார ரீதியாக நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். கொடுமை என்னவென்றால் இவர்கள் தாங்கள் சார்ந்த சமூகத்தில் படிப்பறிவற்ற, பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களைக் கைதூக்கிவிட எந்த உதவியும் செய்வதில்லை..

மாறாக தங்கள் பவிசைக் காட்டுவதற்கு சொந்த ஊரில் பெரிய வீடு கட்டுவது, கோயில் மண்டபங்களைக் கட்டிக் கொடுப்பது போன்றவற்றை மட்டுமே செய்கின்றனர்.. குறைந்த பட்சம் உள்ளூர் பள்ளிகளுக்குக்கூட உதவுவதில்லை..

மூன்றாம் வகுப்பு தொடங்கி நுழைவுத் தேர்வு, நீட் தேர்வு, மண்ணின் மைந்தர்களின் உரிமைகளைப் பறித்து அரசுப் பதவிகளில் மற்ற மாநிலத்தவரும் வரலாம் என்கிற தாராளவாதம் என படிப்பையும், படிப்பு சார்ந்த வேலைகளைப் பறிக்கும் எல்லாக் கொடூரங்களிலும் இந்த நவபார்ப்பனர்கள் தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு எதிராகவே இருக்கிறார்கள்..

முன்னேறியவர்கள் பணம் செலவழித்து நுழைவுத்தேர்வுக்குப் படிக்க வைப்பார்கள்.. அல்லது ஆள் வைத்துத் தேர்வெழுதுவார்கள் ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பாகுபாடின்றி பொருளாதாரத்தில் பலவீனமானவர்கள் அனைவருமே இதில் பாதிக்கப்படுகிறார்கள்.. எதிர்காலத்தில் இன்னும் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள்..

அப்படியான அதிகார அடிவருடிகள்தான் சாதியப் போரைத் தூண்டிக் கொண்டிருக்கிறார்கள்.. ஒன்றுபட்டு உரிமை கேட்க வேண்டிய எளிய மக்கள் அடித்துக்கொண்டு பிரிந்து நிற்கிறார்கள். ஒன்றுபட்டு நிற்க வேண்டிய சிவசாமியையும், பாண்டியனையும் ரைஸ்மில் முதலாளி இப்படித்தான் மோதவிடுகிறார். திராவிடம், தலித் என்பதற்குப் பின்னாலிருக்கும் அரசியலும் இதுவே. கஞ்சிக்குச் செத்தவர்கள் அனைவரும் சாதி, மதம் மறந்து ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரமிது..

அதாவது வெற்றிமாறன்களும், ரஞ்சித்களும் ஓரணியில் நிற்க வேண்டிய நேரம்.. நிற்பார்கள், அவர்களோடு நாமும் நிற்போம் என்று பதிவு செய்திருக்கிறார் கவிதாபாரதி.