இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி ஐஸ் வைக்கிறாரா அல்லது வெடி வைக்கிறாரா..? இன்றும் தொடரும் போராட்டம்

சட்டசபை முற்றுகைப் போராட்டம் என்று இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தை காவல் துறையினர் தடுக்கவோ அல்லது திருப்பியனுப்பவோ இல்லை.


அதனால் எவ்வித பிரச்னையும் இன்றி போராட்டம் முடிவுக்கு வந்தது. அதே நேரம் கடமைக்காக தடையை மீறி பேரணி சென்றதாக 20 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தப் போராட்டங்கள் நடந்த நேரத்தில்தான், கிறிஸ்தவ ஆலயங்கள் பராமரிப்பு அரசு நிதி ஒரு கோடியிலிருந்து 5 கோடியாக உயர்வு. பள்ளிவாசல்கள் பராமரிப்பு அரசு நிதி ஒரு கோடியில் இருந்து 5 கோடியாக உயர்வு. சென்னையில் ஹஜ் பயணிகள் தங்கும் விடுதி கட்ட 15 கோடி ஒதுக்கீடு. பள்ளிவாசல்களில் பணிபுரியும் உலமாக்களின் ஓய்வூதியம் அதிகரிப்பு.

உலமாக்கள் சென்றுவர இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் என்று தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகள் மூலம் இஸ்லாமியர்களை கவர்ந்துவிடலாம் என்று நினைத்தாரோ என்னவோ, இதே விவகாரம் அவரை திருப்பித் தாக்கியுள்ளது.

ஆம், கண் துடைப்புக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டால் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்கிவிடுவார்கள் என நினைக்கவேண்டாம் என்று இஸ்லாமியர்கள் கோபமடைந்திருக்கிறார்கள். வண்ணாரப்பேட்டையில் இன்றும் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது. டெல்லி போன்று இங்கேயும் போராட்டம் நிரந்தரம் ஆகிவிடக் கூடாது என்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறாராம் எடப்பாடி.