கொரோனாவுடன் மக்கள் போராடும் போது சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராளிகளை பழி வாங்குகிறதா மத்திய அரசு..? தமிழக தலைவர்கள் கூட்டு கோரிக்கை.

மத்திய அரசின் சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிர்ப்பு காட்டிய போராட்டத் தலைவர்கள் மீது, இந்த கொரோனா காலத்தை சாக்காக வைத்து பொய் வழக்கு போடுவதாக கேம்பஸ் ஃப்ரண்ட் குற்றம் சாட்டுகிறது.


பொய் வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் என்று தியாகு, சுப.உதயகுமார், நெல்லை முபாரக், கொளத்தூர் மணி, பேராசிரியர் மார்க்ஸ், கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் குரல் கொடுத்துள்ளனர்.

ஜவஹர்லால் நேரு மத்திய பல்கலைக்கழக ஆய்வு மாணவரும், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவருமான M.S சாஜித் அவர்கள் மீது காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டித்து டிவிட்டரில் பதிவு செய்தததை வைத்து டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. பாஜக அரசின் ஜனநாயகத்திற்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து குரலெழுப்பும் செயல்பாட்டாளர்களை மத்திய அரசு தொடர்ந்து வேட்டையாடி வருகிறது, அதில் ஒரு பகுதியே MS சாஜித் மீதான இந்த நடவடிக்கையாகும்.

இந்தியா இதுவரை சந்தித்திராத அளவு காவல்துறை துஷ்பிரயோகம் மோடி அரசின் அரசியல் நலன்களுக்காக நடைமுறைப்படுத்தப்படுகிறது. பல்வேறு அரசியல் செயல்பாட்டாளர்கள் தேச துரோக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த தேசமும் இணைந்து ஆபத்தான தொற்று நோயை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கும்போது பாஜக அரசு CAA, NRC போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து போராடிய நபர்களை நரவேட்டையாடுவதில் ஈடுபடுவது அவமானகரமான பழிவாங்கும் செயலாகும். இது போன்ற சந்தர்ப்பத்தில் நமது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அரசின் தவறான கொள்கைகளை கேள்வி கேட்கும் உரிமையை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.

அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக பேசுவது தேசவிரோத நடவடிக்கை என்று வலதுசாரி அமைப்புகள் சிந்தனையை கட்டமைக்கின்றன. "தேச பக்தர்கள் vs தேச துரோகிகள்" போன்ற பதங்கள் நாட்டின் ஆன்மாவை சிதைக்கும் சக்தியுடையவை.

இது போன்ற பாசிச நடவடிக்கைகளை கண்டிக்க அனைத்து பாசிச எதிர்ப்பு இயக்கங்களும் ஒன்றிணைந்து இந்திய மக்களுக்கு அழைப்பு விடுப்பதோடு, MS சாஜித் போன்ற அனைத்து செயல்பாட்டாளர்கள் மீது போடப்பட்டிருக்கும் போலி வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.