மகளிர் தினத்தில் யாராவது நாஞ்செலியை மதித்தோமா..? மார்பகம் வெட்டிய போராளி

பெண்ணுக்கு அழகே அவளது மார்பகம்தான் என்று சொல்லப்படும் நிலையில், அதே மார்பகத்தை வெட்டி வாழை இலையில் சமர்ப்பித்தவள் சுயமரியாதைக்காரி நாஞ்செலி. யார் அவள் தெரியுமா?


மார்பகங்களின் அளவுக்கேற்ப வரிவிதித்தனர் திருவிதாங்கூர் சமஸ்தானம். ஒடுக்கப்பட்ட மக்கள் வரி செலுத்தவில்லையெனில் மார்பினை மூடக்கூடாது. சேர்தலா என்ற ஊரின் அருகில் முலச்சிபுரத்தில் 30 வயது கூட நிரம்பாத இளம் மங்கை அவளுக்கு இரட்டை வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து வரி கொடுக்க மாட்டேன் என மார்பங்களை அறுத்துக் கொடுத்து வீரமரணம் எய்தினாள்.

இந்த நிகழ்வுக்கு பின்னரே மார்பு வரி சமஸ்தானத்தால் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதே சமஸ்தானத்திற்குட்பட்ட குமரியில் நடந்த சந்தையில், ஒடுக்கப்பட்ட பெண்கள் மார்பை மூடி வந்தால் சமஸ்தானத்தை சேர்ந்தவர்கள் மார்பு துணியை பிடுங்கியதுடன் வரியாக தாலியையும் பறித்து வந்தனர்.

அச் சந்தையின் பெயர் தாலியறுத்தான் சந்தை. நாஞ்செலி நிகழ்வுக்குப் பின் இவ்வழக்கம் கைவிடப்பட்டது. இன்றும் இதே பெயரில் கன்னியாகுமரியில் அச் சந்தை உள்ளது.

இதெல்லாம் நடந்து நூற்றாண்டுகளாகிவிட்டது. பெண்ணியமும், அரசியலும் பேசும் பெண்களை தவிர்த்து எத்தனை பெண்களுக்கு தெரியும் தான் மார்பை மறைத்து நடமாட காரணம் நாஞ்செலி என்று. பலப்பல மகளீர் தினம் கொண்டாடிய போதும். நாம் அனுபவிக்கும் உரிமைக்கு பின்னால் இருக்கும் வீர மங்கைகளை நினைவில் நிறுத்துவதோடு நில்லாமல், அடுத்த தலைமுறைக்கும் கடத்துவோம் என்று கூறியிருக்கிறார் பெர்லின் ஜோஸ்.