வம்புக்கு இழுத்த தினமலர் பத்திரிகையை நீதிமன்றத்தில் பழி தீர்த்த இன்ஸ்பெக்டர்!

கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் கடந்த 2005ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் முத்தமிழ் முதல்வன்.


கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி தினமலரின் சென்னை, விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி ஆகிய பதிப்புகளில் பக்கம் எண் 8-ல் டீக்கடை பெஞ்ச் என்கிற தலைப்பில் ஒரு செய்தி பிரசுரம் ஆகி இருந்தது. அதில் அன்றைய கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் முத்தமிழ் முதல்வன் குறித்து கூறப்பட்டிருந்தது. 

இதற்கு இன்ஸ்பெக்டர் முத்தமிழ் முதல்வன் மறுத்து, தினமலர் நாளிதழ் நிர்வாகிகள் வேங்கடபதி, லட்சுமிபதி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேருக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார். அதில், தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து வேங்கடபதி இந்த செய்தி எனக்கு தெரியாமல் வெளியாகி விட்டது என வருத்தம் தெரிவித்தார். ஆனால் லட்சுமிபதி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேரும் வழக்கறிஞர் நோட்டீசிற்கு பதில் அனுப்பவில்லை. 

இதையடுத்து அவர்கள் மீது இன்ஸ்பெக்டர் முத்தமிழ் முதல்வன் அவதூறு செய்தி வெளியிட்டதாக வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கு கிருஷ்ணகிரி நீதித்துறை நடுவர் எண் 1ல் நடந்து வந்தது.

இவ்வழக்கில் லட்சுமிபதி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேரும் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வேண்டும் என நீதித்துறை நடுவர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாங்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் இருப்பதற்காக விலக்கு அளிக்க கேட்டு மனு கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் இருக்க விலக்கு அளித்தும், அதே நேரத்தில் இந்த வழக்கின் தீர்ப்பின் போது 2 பேரும் கட்டாயம் ஆஜர் ஆக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ் வழக்கில் கிருஷ்ணகிரி நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. ஆனாலும் லட்சுமிபதி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவதூறு செய்தி வெளியிட்டதற்காக தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனையும்,

தலா ரூ.5 லட்சம் நஷ்ட ஈடாக அப்போதைய இன்ஸ்பெக்டரும், ஓய்வுபெற்ற டிஎஸ்பியுமான முத்தமிழ் முதல்வனுக்கு வழங்க வேண்டும் என நீதித்துறை நடுவர் சுல்தான்ஆர்வின் உத்தரவிட்டார். 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாத காரணத்தால் 2 பேரையும் பிணையில் வர முடியாமல் கைது செய்து சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.