நியூஸ் 18 செய்தியாளரை அடித்து ஜீப்பில் ஏற்றிய இன்ஸ்! பதற வைக்கும் காரணம்!

மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக முதல்வர் வந்த போது அவரை பின் தொடர்ந்து அனைத்து செய்தியாளர்களும் வந்தனர். நியூஸ் 18 குழுவினரும் அவர்களது அலுவலக காரில் வந்தனர். சிந்தாமணி சந்திப்பில் முதல்வர் பேசிக்கொண்டிருந்த போது, அடுத்த இடமான வலையங்குளம் செல்ல நியூஸ் 18 குழுவினர் புறப்பட்டனர். பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே வரும் போது, அனைத்து வாகனங்களையும் போக்குவரத்து போலீசார் மறித்தனர்.


மற்றவர்களுடன் நியூஸ் 18 குழுவின் வாகனமும் நின்றது . போலீசாரின் பணி கருதி, அடுத்து நகராமல் அங்கேயே நின்றனர். வழியில் வரும் முதல்வர் பிரசார காட்சியை எடுக்க நியூஸ் 18 ஒளிப்பதிவாளர் ராம்குமார் கேமராவை எடுத்து சாலைக்கு வந்த போது, அவரை மறித்த கீரைத்துறை ஆய்வாளர்  டேவிட் ரவிராஜன்(குற்றம்) ஒளிப்பதிவாளரை கேமரா உடன் தள்ளிக்கொண்டு அடித்து இழித்து சென்றார். கேமராவை ஆப் செய்யக்கோரி கடுமையான வார்த்தைகளால் சாடினார். நிதர்சனத்தை புரிய வைக்க உடன் வந்த தலைமை செய்தியாளர் ஸ்டாலின் முயற்சித்தும், அவரையும் சாடியதுடன், இருவரையும் காவலர் உதவியுடன் சிறைபிடித்தார். 

நகர முயன்ற ஒளிப்பதிவாளரை சட்டையுடன் பிடித்து இழுத்ததில் அவரது நேரலை பிஎன்சி கேபிள் அறுந்தது. அசாதாரண சூழல் குறித்து உடனடியாக செய்தியாளர் ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரிகளிடத்தில் தெரிவித்தார். அவர்களும் சம்மந்தப்பட்ட ஆய்வாளரை தொடர்பு கொண்டு கடிந்தனர். அவர்களை விடுவிக்க கூறினர். ஆனாலும் ஆய்வாளர், ' நான் கூறிய பின் எப்படி கேமராவை ஆப் செய்யாமல் இருந்தாய்...,' எனக்கூறியதுடன், நெல்லையில் இப்படி தான் செய்தியாளர்களை கதற வைத்தேன்.4 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள், என்னை ஒன்று புடுங்க முடியவில்லை. இப்ப மட்டும் புடுங்க போறீங்களா?..,' என தொடர்ந்து மிரட்டினார்.

இருவரையும் கைது செய்துள்ளதாகவும், ஜிப்பில் ஏறும்படி கூறினார். நாங்கள் மறுத்ததால் மீண்டும் சாடினார். இருவர் பெயரையும் குறித்து கொண்ட அவர்,  நீங்க போங்க பின்னாடியே எப்ஐஆர் போட்டுட்டு வீட்டுக்கு வர்றேன் என கூறினார். உயர் அதிகாரிகள் எங்களை புறப்பட கூறியதும், கார் கதவு அருகே வந்த டேவிட், சட்டையை பிடித்து இழுத்து மொபைல் போனை வாங்க முயன்றார். பின்னர் நாங்கள் நகர்ந்துவிட்டோம். நடந்த அனைத்தையும் நாங்கள் மட்டுமல்ல, கூடியிருந்த 100கணக்கான மக்களும் படம் பிடித்துள்ளனர். அதிகாரம் சாமனியர்களை மட்டுமல்ல ஊடகத்தையும் பதம் பார்க்கும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம்.