சென்னையில் தான் படித்த பள்ளிக்கு ஏதாவது நலத்திட்டம் செய்ய வேண்டும் என்று நினைத்த பெண் காவல் ஆய்வாளர் அந்த பள்ளியை தத்தெடுத்துக் கொண்டார்.
காக்கி சட்டைக்குள்ளும் ஒரு ஈர மனசு! படித்த பள்ளியை அப்படியே தத்தெடுத்த இன்ஸ்பெக்டர் காஞ்சனா! நெகிழ வைக்கும் பின்னணி!
சுமார் 82 ஆண்டுகளுக்கு முன்னர் வண்ணாரப்பேட்டையில் தொடங்கப்பட்டது வட சென்னை நடுநிலை பள்ளி. இந்த பள்ளியில் 1982ம் ஆண்டு 5ம் வகுப்பு படித்தவர் காஞ்சனா தற்போது சென்னை கிண்டி காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
தான் படித்த பள்ளியில் 60 மாணவர்கள் மட்டுமே இருப்பதாகவும் ஆனால் அடிப்படை வசதிகள் இல்லையென்றும் கேள்விபட்ட காஞ்சனா அந்த பள்ளிக்கு சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் பள்ளியை தான் தத்தெடுத்துக் கொள்வதாக கூறிய காஞ்சனா முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் செலவுசெய்து பள்ளி கட்டிடத்திற்கு வர்ணம் பூசினார்.
பின்னர் மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடிய காஞ்சனா அந்த பள்ளியில் படித்து பின்னர் நல்ல நிலைமைக்கு வந்தவர்கள் குறித்து எடுத்துரைத்தார். அதேபோல் நீங்களும் வரவேண்டும் என கேட்டுக்கொண்டதுடன் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கி உற்சாகப்படுத்தினார்.
அரசு வேலை கிடைத்து காவல் அதிகாரியாக முன்னேறிய காஞ்சனா தான் படித்த பள்ளியின் தேவைகளை பூர்த்தி செய்ததை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.