நாப்கினுக்குள் விசா..! ஐஸ்கட்டி டார்ச்சர்! பல்லை உடைத்த பயங்கரம்! குவைத்தில் தமிழ்ப் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீத அனுபவம்!

சென்னை: குவைத் சென்று வேலை பார்த்தால், நிறைய பணம் சம்பாதிக்கலாம் என ஆசைப்பட்டு, சிக்கலில் விழுந்த சென்னைப் பெண்ணின் கதைதான் இது...


சென்னை ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (34), குடும்ப கஷ்டம் காரணமாக, ஏஜென்ட் ஒருவரின் ஆலோசனைப்படி, குவைத் சென்று வீட்டு வேலை செய்ய தீர்மானித்தார். நிறைய சம்பளம் கிடைக்கும் எனக் கூறியதால், அதற்கு ஆசைப்பட்ட கிருஷ்ணவேணி, குவைத் சென்று இறங்கியபோதுதான் விபரீதத்தை உணர்ந்தார்.

ஆம், கையில் 2 விசாவை கொடுத்து, ஒரு விசாவை விமான நிலையத்தில் காட்டும்படி சொன்ன தமிழக ஏஜென்ட் மற்றொரு விசாவை நாப்கின் உள்ளே வைத்து, குவைத் ஏஜென்ட் ஒருவரிடம் தரச் சொல்லியுள்ளனர். இதன்படியே அவரும் செய்துள்ளார். ஆனால், அந்த விசாவில்தான் அவரது தலையெழுத்து இருப்பது அவருக்கு அப்போது தெரியவில்லை.  

இதன்படி, கிருஷ்ணவேணியின் அடையாளத்தை மறைத்து, வீட்டு வேலைக்குச் சேர்ந்த கிருஷ்ணவேணிக்கு, காபி, ரொட்டி மட்டுமே, 3 வேளையும் உணவாக தரப்பட்டுள்ளது. அவர் வேலை செய்த வீட்டின் உரிமையாளர் கடுமையாக அவரை அடித்து சித்ரவதை செய்துள்ளார். இதில், கிருஷ்ணவேணியின் பற்கள் கூட உடைந்துவிட்டன.

தனது கஷ்டம் பற்றி குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, கிருஷ்ணவேணி தெரிவிக்க, அவர்கள் உடனடியாக எய்ம்ஸ் என்ற என்ஜிஓ அமைப்பை தொடர்புகொண்டு உதவி கோரினர். இந்த என்ஜிஓவின் நிறுவனர் கன்னியாபாபு இதுபற்றி தமிழச்சி தங்கபாண்டியன் எம்பிக்கு தெரியப்படுத்தி அவர் மூலமாக, இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்தார். ஆனால், குவைத் அரசு தரப்பில் அப்படி யாரும் தங்களது நாட்டில் இல்லை என விவரம் தெரிவிக்கப்பட்டது.  

இதையடுத்து, கிருஷ்ணவேணியை குவைத் அனுப்பி வைத்த ஏஜென்ட்டை திருவண்ணாமலை போலீசார் உதவியுடன் கைது செய்து விசாரித்தனர். அந்த நபர், தனது சொந்த செலவில் கிருஷ்ணவேணியை சென்னை கொண்டுவருவதாக, உறுதி அளித்து, சில நாட்களிலேயே, அவரை பத்திரமாக மீட்டு வந்துவிட்டார். இதுபோல, ஏராளமான பெண்கள் வளைகுடா நாடுகளில் கொடுமைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவர்களை மீட்கும்படியும் கிருஷ்ணவேணி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.