ஆஸி க்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்தியா!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடேயேயான 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்தியா அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை ஆஸ்திரேலியாவில் வெல்வது இதுவே முதல் முறையாகும் .


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காம் டெஸ்ட் போட்டியின் 5ம் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டதால் இந்த போட்டி டிராவில் முடிந்தது.

இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காம் டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜனவரி 3ம் தேதி  தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது.

இந்திய அணியின் புஜாரா 193 ரன்களுக்கு ஆட்டமிழந்து இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

பின்னர் ரிஷாப் பாண்ட் மற்றும் ஜடேஜா தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களை இந்த ஜோடி பந்தாடியது. ரவீந்திர ஜடேஜா 81 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணி டிக்ளர் செய்தது. ரிஷாப் பாண்ட் அவுட் ஆகாமல் 159 ரன்களை விளாசினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்க்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா 300 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து பாலோவ் ஆன் ஆனது. இதனால் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் நான்காம் நாள் ஆட்டம் தொடர முடியாமல் முடிவுக்கு வந்தது.

ஐந்தாம் நாளாகிய இன்றும் மழை பெய்து வந்ததால் இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. புஜாரா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார்